- சுஐப் எம் காசிம்
தலைமன்னார் கடலில் மீனவர்கள் காலா காலமாக பாவித்து வந்த சுருக்கு வலை மீன் பிடித் தொழிலில் ஏற்படுத்தப்பட்ட தடைகளை நிவர்த்தி செய்து தருமாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் அந்தப் பிரதேச மீனவர்கள் விடுத்த வேண்டுகளை அடுத்து அதற்கான முயற்சிகளை அமைச்சர் மேற்கொண்டு வருகின்றார்.
அமைச்சர் மேற்கொண்ட உடன் நடவடிக்கை அடுத்து கடற்றொழில் நீரியல்வள அமைச்சர் நாளை மறுதினம் சனிக்கிழமை மன்னாருக்கு விஜயம் செய்து நிலமைகளை பார்வையிட உள்ளார்.
‘’3/4 அங்குல கண் வலையைப் பாவித்து பரம்பரை பரம்பரையாக தொழிலை மேற்கொண்டு வந்த எங்களை தற்போது ¼ அங்குல கண்வலையைப் பயன்படுத்தி மீன் பிடித்தொழிலை மேற்கொள்ளுமாறு கடற்படை அதிகாரிகளும், கடற்படையினரும் நிர்ப்பந்தித்து வருகின்றனர்.
பொதுவாக தலை மன்னார் கடலில் ‘சூடை, கரட்டை, சாளை’ போன்ற மீன்களே இருக்கின்றன. இந்த மீன்களை ¾ அங்குல கண் வலையைப் பயன்படுத்தாமல் பிடிக்க முடியாது. ¼ அங்குல கண்வலையைப் பயன்படுத்தி மீனவத் தொழிலை மேற்கொள்ளுமாறு நாங்கள் நிர்ப்பந்திக்கப்படுகின்றோம். இந்த வலையில் இந்தக் கடலில் 90% ஆக இருக்கும் சூடை, சாளை, கரட்டை அகப்படாது. இந்த மீன்களையே நம்பி வாழ்க்கை நடாத்தும் நாம் எவ்வாறு ஜீவனோபாயம் நடத்துவது?
அத்துடன் நவம்பர் மாதம் தொடக்கம் ஏப்ரல் வரையே இந்தத் தொழிலை மேற்கொள்ள முடியும். ஏனெனில் ஏனைய காலங்களில் இந்தக்கடலில் இந்த மீன்கள் இருக்காது. அது மட்டுமன்றி நாங்கள் காலை 6 மணி தொடக்கம் மாலை 6 மணி வரையே தொழில் செய்து வருகின்றோம். எமது கடற்பிராந்தியத்திற்கு சுமார் 10 கிலோ மீட்டருக்கு அப்பால் இந்திய கடல் எல்லை இருக்கின்றது. இதனால் ஆறு மணிக்குப் பிறகு பெரும் படகுகளிலும் டோலர்களிலும் இந்திய மீனவர்கள் எமது கடலுக்குள் ஊடுருவி மீன்களை அள்ளி வருகின்றனர்.
சிறு படகுகளில் தொழில் செய்யும் நாங்கள் அவர்களுடன் முரண்பட்டு போட்டி போட்டு தொழில் செய்ய முடியாது. அத்துடன் எமது உயிருக்கும் உத்தரவாதம் இல்லை. அவ்வாறான சில சமபவங்கள் நடந்தும் உள்ளன. எனவே குறைந்தது ஓர் அங்குல கண் வலையைப் பாவித்தேயாயினும் எமக்கு மீன் பிடிக்க அனுமதி பெற்றுத்தாருங்கள்” என தலை மன்னார் மீனவர் சங்கப் பிரதிநிதி மொஹமட் ரூமி தலைமையில் வந்த மீனவர்கள் அமைச்சரிடம் தெரிவித்தனர்.
மீனவர்களின் பிரச்சினையை கேட்ட அமைச்சர் ரிஷாட் பதியுதீன், உடனடியாக அமைச்சர் மகிந்த அமரவீரவிடம் தொடர்பு கொண்டு மீனவர்களின் பிரச்சினையை தீர்த்து வைக்க விடுத்த வேண்டுகோளை அடுத்தே தலை மன்னர் மீனவர்களை களத்தில் சந்தித்துப் பேச்சு நடத்த அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.