அக்கரைப்பற்று பிரதேசங்களில் அரசியல் நடவடிக்கைகளுக்காக தாம் அங்கு செல்லவில்லையெனவும், அந்தப் பிரதேசத்தில் பெண்கள் அமைப்புகளின் வேண்டுகோளை ஏற்று, நலத்திட்டங்களை முன்னெடுப்பதற்கான ஆலோசனைகளை மேற்கொள்வதற்காகவே பல பகுதிகளுக்கு விஜயம் செய்ததாகவும் மக்கள் காங்கிரஸின் மகளிர் பிரிவின் தேசிய இணைப்பாளர் டாக்டர். ஹஸ்மியா தெரிவித்தார்.
மினுவாங்கொடையில் இடம்பெற்ற மகளிர் ஒன்றுகூடலில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மகளிர் அணியின் தேசிய இணைப்பாளராக நான் பணியாற்றுவதால், நாட்டின் பல பாகங்களிலும் பெண்கள் சார்ந்த பல்வேறு பிரச்சினைகளை ஆராயும் செயற்திட்டங்களை எமது அணி சார்ந்தவர்களுடன் இணைந்து, முன்னெடுத்து வருகின்றேன். இறுதியாக அக்கரைப்பற்று பிரதேசத்தில் அங்குள்ள பெண்களின் வேண்டுகோளினை ஏற்று, அங்கு நாம் விஜயம் செய்த போது, பெண்கள் எதிர்நோக்கும் பல்வேறு வகையான பிரச்சினைகள் பற்றி அறிந்துகொண்டோம். அந்தப் பிரச்சினைகளை இனங்கண்டு, அதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கான செயற்பாடுகளை ஆயத்தப்படுத்தி வருகின்றோம்.
கட்சியின் அரசியல் நடவடிக்கைகளுக்காகவோ, தேர்தலை மையமாக வைத்தோ நாம் அங்கு அண்மையில் செல்லவில்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும். தவறான புரிதலால் பல விமர்சனங்களை ஊடகங்கள் மூலம் வெளிப்படுத்தியது கவலையளிக்கின்றது. போதாக்குறைக்கு மற்றைய கட்சிகளின் மகளிர் தலைவிகளுடன் எம்மை ஒப்பிட்டு பேசி பிரச்சினைகளை உண்டுபண்ண சிலர் முனைகிறார்கள். என்னைப் பொறுத்தவரையில் எந்தக் கட்சியின் மகளிர் பிரிவாக இருந்தாலும் எமது நாட்டில் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை உரிய முறையில் தீர்த்து வைத்து அவர்களுக்கான வாழ்வாதாரங்களையும், உதவிகளையும் வழங்க முடியுமாயின் அது பெண் சமூகத்திற்கு கிடைக்கும் வரப்பிரசாதமாகவே நாம் கருதுகின்றோம்.