Breaking
Tue. Dec 24th, 2024

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்படுவதை தடுப்பதற்கு பொலிஸார் நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை என தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கபே தெரிவித்துள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி அலுவலகம் மீது மேற்கொள்ளப்பட்ட திட்டமிடப்பட்ட தாக்குதலை கண்டிப்பதாக தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பாக கபே வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தேர்தல் குறித்த அறிவிப்பிற்கு பின்னர் முக்கிய எதிர்கட்சிகளும், அவற்றின் செயற்பாடுகளும் மிரட்டல், அச்சுறுத்தல், வன்முறை தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளன, அதன் உச்சக்கட்டமே சிறிகோத்தா மீதான தாக்குதல்.

குறிப்பிட்ட தாக்குதல் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகத்தில் கூட்டமொன்று நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையே ஆரம்பமானது.

அமைச்சர் விமல்வவீரவன்சவின் கீழ் இயங்கும் தேசிய அமைப்பாளர்களின் சம்மேளனம் என்ற அமைப்பை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டமொன்றை மேற்கோண்டனர். பொது வேட்பாளருக்கும் எதிர்கட்சி தலைவருக்கும் இடையில் இரகசிய ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டதாக குற்றம் சாட்டியதுடன், ரணில் விக்கிரமசிங்கவை துரோகி என வர்ணித்து கோசங்களை எழுப்பினர்.

இதேவேளை ஐக்கியதேசிய கட்சி தலைமையகத்திற்குள்ளிருந்த ஆதரவாளர்கள் எதிர்கோசம் எழுப்பியதை தொடர்ந்து நிலைமை பதற்றமானதாக மாறத்தொடங்கியது.

இதன் பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஐக்கியதேசிய தலைமையகத்தை தாக்கதொடங்கினர், அதன் பின்னர் உள்ளேயிருந்த 2000 ஐ.தே.க ஆதரவாளர்களும் திருப்பி தாக்க தொடங்கினர்.

குறிப்பிட்ட ஆர்ப்பாட்டம் நடைபெறப்போவது குறித்தும், ஐக்கியதேசிய கட்சி தலைமையகத்தில் கூட்டமொன்று நடைபெறுவது குறித்தும், பொலிஸாருக்கு முன்னரே தெரிந்திருந்தும், வன்முறை நிகழ்வதை தடுப்பதற்கு பொலிஸார் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

அதேவேளை ஐக்கியதேசிய கட்சி ஆதரவாளர்களால் அரச ஆதரவாளர்கள் மடக்கிபிடிக்கப்படலாம் என தெரிந்தவுடன் அவர்களை பாதுகாப்பதில் பொலிஸார் துரிதமாக செயற்பட்டனர்.

கலகத்தை தடுப்பதற்கான ஏற்பாடுகளுடன் காணப்பட்ட பொலிஸார் அரச தரப்பு ஆதரவாளர்களை கட்டுப்படுத்த ஆரம்பத்தில் நடவடிக்கைகள் எதனையும் எடுக்கவில்லை, எனினும் பின்னர் அவர்களை தப்பிச்செல்ல அனுமதித்தனர். அவர்கள் வீடமைப்பு அமைச்சின் பல வாகனங்களில் நுகேகொட நோக்கி தப்பிச்சென்றனர்.

பொலிஸாரின் செயற்பாடின்மையால் வன்முறைகள் மூண்டது இது முதற்தடவையல்ல, எப்பாவல, அம்பாந்தோட்டை, அப்புத்தளையிலும் பொலிஸார் நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை, ஆனால் அரச ஆதரவாளர்களை காப்பற்ற முயன்றனர் என கபே தெரிவித்துள்ளது.

Related Post