யோஷித்த ராஜபக்ஷவுக்குச் சொந்தமான CSN தொலைக்காட்சியில் நிறைவேற்று அதிகாரியாகக் கடமையாற்றிய, அவரது முன்னாள் காதலி என அறியப்படும் யஷாரா அபேநாயக்கா நிதி மோசடி குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவில் நேற்றைய தினம் வாக்குமூலமொன்றை அளித்துள்ளார்.
அத்துடன், நேற்றைய தினமே குறுஞ்செய்தியொன்றின் (SMS) மூலம் யஷாரா நடந்த விடயங்களை நாமல் ராஜபக்ஷவுக்கு தெரிவித்துள்ளார்.
நிதி மோசடி குற்றத்தடுப்புப் பிரிவில் தான் உண்மைகள் அனைத்தையும் தெரிவித்ததாகவும், அவர்கள் CSN பணிப்பாளர்களை விசாரணைக்கு அழைப்பார்கள் என்றும், அனைவருக்கும் உள்ளே செல்வதற்கு தயாராக இருக்கும்படியும் குறித்த குறுஞ்செய்தியில் யஷாரா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில்,
யஷாரா நாமலுக்கு குறுஞ்செய்தி அனுப்பிய சில நிமிடங்களுக்குப் பிறகு, CSN பணிப்பாளர்களைத் தொடர்புகொண்ட நிதி மோசடி விசாரணைப் பிரிவு அதிகாரிகள், எதிர்வரும் 15ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அனைவரையும் நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு வாக்குமூலம் அளிக்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.
இது தொடர்பில் நாமல், யோஷித குழுவினர் கதி கலங்கிப் போயுள்ளதாக அறியக்கிடைக்கும் நிலையில், யஷாரா அரச தரப்பு சாட்சியாளராக மாறிவிடக்கூடும் என்கிற அச்சம் அவர்களிடத்தில் பரவியிருப்பதாகவும் தெரிய வருகின்றது.
அதேவேளை, வசீம் தாஜுதீன் மரணம் இயற்கையாக நிகழ்ந்ததா அல்லது திட்டமிட்ட படுகொலையா என்கிற அடிப்படையில் மிக முக்கியத்துவம்மிக்கதோர் நீதிமன்ற தீர்ப்பு இன்று (10) பிறப்பிக்கப்படவுள்ளது.
ரக்பி வீரர் வசீம் தாஜுதீன் படுகொலைச் சம்பவம் தொடர்பிலான செய்திகளில் பரபரப்பாகப் பேசப்பட்ட யஷாரா அபேநாயக்க, கண்டி ரக்பி அணியின் தலைவர் ஃபஷீல் மர்ஜாவோடு அண்மையில் திருமண பந்தத்தில் இணைந்தமையும் குறிப்பிடத்தக்கது.