ரகர் வீரர் வசிம் தாஜூடின் கொலை குறித்த விசாரணை கோவையை மூடுமாறு சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க தமக்கு உத்தரவிட்டார் என ஓய்வு பெற்ற துணைப் பொலிஸ் அத்தியட்சகர் கமராலலாகே தர்மவர்தன விசாரணைகளின்போது கூறியதாக புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
நீதவான் மேலதிக நீதவான் நிசாந்த பீரிஸிடம் இந்த விடயங்களைத் தெரிவித்துள்ளனர்.
தாஜூடின் கொலை குறித்து நேற்று (26) நடைபெற்ற வழக்கு விசாரணைகளின்போது இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பி வைக்கப்படக்கூடிய அறிக்கைகளைக் கூட தமக்கு அனுப்பி வைக்குமாறு அனுர சேனாநாயக்க உத்தரவிடுவார்.
தாஜூடின் மரணச் சம்பவம் தொடர்பிலான விசாரணை அறிக்கை வாகன விபத்து என்ற அடிப்படையில் பூர்த்தி செய்து விசாரணைக் கோவையை மூடி விடுமாறு அப்போதைய பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க உத்தரவிட்டிருந்தார்.
134/12 என்ற இலக்கமுடைய வாகன விபத்து குறித்த விசாரணைக் கோவையை தாம் இப்போதே பார்ப்பதாக அனுர சேனாநாயக்க வெளியிட்ட கருத்து முற்றிலும் பொய்யானது என தர்மவர்தன விசாரணைகளில் கூறியதாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, வழக்கு விசாரணைகளுக்கு மொபிடெல் தொலைதொடர்பு நிறுவனம் உரிய ஒத்துழைப்பு வழங்கவில்லை எனவும், இதனால் மொபிடெல் நிறுவன பிரதம நிறைவேற்று அதிகாரிக்கு அழைப்பாணை விடுத்து இது குறித்து விசாரிக்குமாறும் அரச தரப்பு சட்டத்தரணி நீதவானிடம் கோரியுள்ளார்.