றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜூடீன் கொலை செய்யப்படும் சந்தர்ப்பத்தில் நாராஹென்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு ஜனாதிபதி செயலகம் மற்றும் அலரி மாளிகையில் இருந்து எடுக்கப்பட்டதாக கூறப்படும் தொலைபேசி அழைப்புகளின் விபரங்கள் அழிக்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
ஜனாதிபதி செயலகம் மற்றும் அலரி மாளிகையின் மேலதிக செயலாளர்களிடம் பெற்றுக்கொண்ட வாக்குமூலங்களில் இது தெரியவந்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
தொலைபேசி அழைப்பு விபரங்களை அழித்த சம்பவத்துடன் தொடர்புடைய அதிகாரிகள் பணியை விட்டுச் சென்றுள்ளதாகவும் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய அதிகாரிகளுக்கு எதிராக விசாரணைகளை நடத்த உள்ளதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் கூறியுள்ளனர்.
தொலைபேசி அழைப்பு யாரால் எடுக்கப்பட்டது என்பதை கண்டறிவதே விசாரணைகளின் நோக்கம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாஜூடீன் கொலை வழக்கு சம்பந்தமாக கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க, நாராஹென்பிட்டி குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி ஆகியோர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
தாஜூடீன் கொலையுடன் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வர்களுக்கு தொடர்பிருப்பதாக குற்றம் சுமத்தப்படுகிறது.(tw)