கொல்கத்தாவில் தாடி வைத்திருப்பதற்காக முஸ்லீம் ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள அதுனிக் குரூப் ஆப் இன்டஸ்ட்ரீஸின் சுரஙகப் பிரிவின் ஜெனரல் மேனேஜர்(பொது மேலாளர்) ஆக கடந்த 6 ஆண்டுகளாக பணியாற்றியவர் முகமது இஸ்மாயில். அவர் கடந்த ஆண்டு ஹஜ் புனித யாத்திரை செய்துவிட்டு மே மாதம் தாடியுடன் நாடு திரும்பினார். அதன் பிறகு அவரது சம்பளம் பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் வரை பாதி சம்பளத்தை பெற்று பணியாற்றியுள்ளார் இஸ்மாயில். இதையடுத்து இது குறித்து நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டர் மனோஜ் அகர்வாலை சந்தித்து பேச முடிவு செய்தார் இஸ்மாயில்.
மனோஜை சந்தித்து பிடித்து வைக்கப்பட்டுள்ள தனது மீது சம்பளத்தையும் அளிக்குமாறு அவர் கேட்டதற்கு அவரை பணிநீக்கம் செய்துவிட்டனர். மனோஜ் இஸ்மாயிலை தீவிரவாதி என்று கூறியுள்ளார். இது குறித்து இஸ்மாயில் கூறுகையில், நான் ஹஜ்ஜில் இருந்து திரும்பி வந்தபோது தாடி வைத்திருந்தேன். அதற்கு நிறுவனத்தின் எம்.டி.யோ நான் அவரை பயமுறுத்த முயன்றதாகவும், என்னை தீவிரவாதி என்றும் தெரிவித்துள்ளார். என் சொந்த மண்ணில் என்னை தீவிரவாதி என்று அழைப்பதை கேட்டு வருத்தமாக உள்ளது என்றார்.
இஸ்மாயில் தாடியால் தனது வேலை பறிபோனது குறித்து மனித உரிமைகள் ஆணையம், சிறுபான்மையினர் ஆணையம், முதல்வர் அலுவலகத்தை அணுகியும் பலனில்லை. மேலும் மனோஜ் அகர்வாலுக்கு எதிராக அவர் போலீசில் புகார் அளித்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. மனோஜின் சகோதரர் மகேஷ் அகர்வால் கூறுகையில், இஸ்மாயில் ஒரு ஏமாற்றுக்காரர். அவர் எங்களை மிரட்டியதுடன் அலுவலகத்தை சேதப்படுத்துவேன் என்று கூறினார் என்றார். இஸ்மாயில் நீதி கேட்டு கொல்கத்தா உயர் நீதிமன்றத்தை அணுக உள்ளார்.
இந்த செய்தி மீடியாவுக்கு சென்றதும் அந்நிறுவனம் இஸ்மாயிலின் மீத சம்பளத்தை அளிப்பதாக எஸ்.எம்.எஸ். அனுப்பியுள்ளது. ஆனால் அவர் நீதியை மட்டுமே எதிர்பார்க்கிறார். முன்னதாக முஸ்லீம் என்பதற்காக மும்பையைச் சேர்ந்த எம்.பி.ஏ. பட்டதாரி ஜீஷான் கானுக்கு ஏற்றுமதி நிறுவனம் ஒன்று வேலை அளிக்க மறுத்தது. மேலும் முஸ்லீம் என்பதால் மும்பையில் இளம் பெண் ஒருவர் வாடகை வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.