தாதியர் சேவையின் உயர்மட்ட பதவிகள் சில தொழிற்சங்க தலைவர்களின் தேவைக்கேற்ப நியமிக்கும் செயற்பாட்டில் சுகாதார அமைச்சு ஈடுபட்டுள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கம் குற்றம்சுமத்தியுள்ளது.
சுகாதார அமைச்சின் தாதியர் பணிப்பாளர், மருத்துவமனை சேவையாளர் பதவிகளும் தொழிற்சங்க தலைவர்களின் வேண்டுதல்களுக்கு அமைவாக நியமிக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் காமினி குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
கொழும்பு தேசிய மருத்துவமனையிலும் விசேட தரங்களைக் கொண்ட பிரதான தாதியர் அதிகாரிகளுக்கான பதவிகளை வழங்கிய சந்தர்ப்பங்களிலும், இவ்வாறான முறைகேடான நிலையே ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், கல்வி கூட்டுறவு சங்கத்தின் முன்னாள் சட்டவிரோத இடைக்கால நிர்வாக சபையை அகற்றி மீண்டும் அதேபோன்ற முறையற்ற நிர்வாகத்தை தோற்றுவிப்பதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் குற்றம்சுமத்தியுள்ளது.
நேற்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய சங்கத்தின் பொது செயலாளர் மஹிந்த ஜயசிங்க, குறித்த நிர்வாக அமைப்பு அரசியலமைப்புக்கு புறம்பானது என குறிப்பிட்டுள்ளார்.