Breaking
Fri. Nov 15th, 2024
”வில்பத்து பிரதேசத்தில் 08 ஆயிரம் ஏக்கர் காணி எனக்கு இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி திஸ்ஸநாயக்க கூறுகின்றார். எனக்கு அவ்வாறு காணிகள் இருப்பதாக அவர் நிரூபித்தால் நான் அரசியலை விட்டு ஒதுங்குவதற்கு தயார் அவ்வாறு நிரூபிக்காத பட்சத்தில் அவர் அரசியலிருந்து ஒதுங்க தயாரா?” என பாராளுமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் சவால் விடுத்தார்.
மக்கள் விடுதலை முன்னணியின் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் போது, உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,
மக்கள் விடுதலை முன்னணியின் நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு ஆதவளிக்க வேண்டுமென எனது மனம் கூறுகின்றது. எனினும் சஹ்ரான் கும்பலின் உயிர்த்த ஞாயிறு குரூர தாக்குதலுக்கு பின்னர் என் மீதும், எம் சமூகத்தின் மீதும் சுமத்தப்பட்ட வீணான அபாண்டங்களையும், பழிகளையும் நான் நினைத்துப் பார்க்கின்றேன். எமது சமூகத்தின் மீது கண்டியில் கட்டவிழ்த்தப்பட்டிருந்த வன்முறைகளை தடுக்கும் வகையில் முஸ்லிம் அமைச்சர்கள் ஒட்டு மொத்தமாக பதவி விலகிய சந்தர்ப்பத்தில், சகோதரர் ரவூப் ஹக்கீம் நாங்கள் பதவி விலகினாலும் அரசாங்கத்தை வீழ்த்த விடமாட்டோம் என கொடுத்த வாக்குறுதியை மீற முடியாத நிலையிலும் இருக்கின்றோம்.
பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புபட்ட 10 குற்றச்சாட்டுக்களை என் மீது சோடித்து நம்பிக்கையில்லாத் தீர்மானத்தையும் கொண்டு வந்தனர். நாட்டுக்கு நான் கேடு விளைவித்தாகவே அந்த குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டிருந்தன. இதன் மூலம் என்னை தோற்கடித்து அதன் மூலம் தமது நோக்கத்தை நிறைவேற்றுவதே எதிர்க்கட்சியினரின் முனைப்பாக இருந்தது. இந்த எதிர்க்கட்சி காரர்களுடன் நீண்ட காலம் நான் அரசியலில் பயணித்தவன்.அவர்களில் சிலர் எனது நல்ல நண்பர்கள் கூட எனினும், விரும்பியோ விரும்பாமலோ அவர்கள் கையொப்பம் இட்டிருக்கலாம். என் மீதான குற்றச்சாட்டுக்களை முறையிடுமாறு ஊடகங்கள் வாயிலாக பகிரங்கமாக அறிவிக்கப்பட்டிருந்த போதும் ஒரு சிலரை தவிர மற்றவர்கள் மெளனமாகி விட்டனர். அமைச்சர் ஒருவரின் பெயரை சொல்லி அவருக்கு எதிரான குற்றாச்சாட்டுக்களை பதியுமாறு சொல்லப்பட்டமை வரலாற்றில் முதற்தடவையாக நடைபெற்றது. தேசப்பிரேமிகள் என கூறப்படுபவர்களும், தேசப்பற்றாளர்கள் என மார்தட்டுபவர்களும் பொலிஸுக்குச் செல்லாது மெளனம் காத்தது ஏன்.? எனக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அத்தனையும் அப்பட்டமான பொய். பொலிஸ் மா அதிபரும் அதனை அறிவித்தார். பாராளுமன்ற தெரிவுக்குழுவிலும் நான் அதனை தெளிவு படுத்தினேன். இந்த குற்றச்சாட்டுக்களில் ஒன்றையாவது நீங்கள் நிரூபித்தால் நான் அரசியலிலிருந்து நீங்குவதற்கு தயாராக உள்ளேன் என சவால் விடுக்கின்றேன். உயிர்த்த ஞாயிறு தாக்குதலை அரசியலுக்காக பயன்படுத்தாதீர்கள் .
அப்பாவி மக்கள் பட்ட துன்பங்களை நினைத்து இன்னும் நான் வேதனையுடன் இருக்கின்றேன். தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட சஹ்ரானின் சகாக்கள் அனைவருக்கும் உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும். அதுமாத்திரமின்று மக்கள் விடுதலை முன்னணியினர் கொண்டுவந்த இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கூறியவாறு ஜனாதிபதி , பிரதமர் அமைச்சர்கள் உட்பட அரசாங்கத்தின் அங்கத்தவர்கள் அனைவரும் இதற்கு வகை சொல்ல வேண்டும் இறைவனிடத்திலும் பதில் சொல்லியே ஆக வேண்டும்.
சஹ்ரானின் கடந்த கால நடவடிக்கைகள் அனைத்தையும் உலமா சபை, முஸ்லிம் அமைப்புக்கள் உட்பட பொலிஸாருக்கு வழங்கிய போதும் தாக்குதல் தொடர்பில் அவர்களுக்கு முற்கூட்டி தெரிவிக்கப்பட்டிருந்த போதும் தாக்குதலை தடுக்க வக்கில்லாதவர்கள் அத்தனை பழிகளுக்கும் காரணமாக இருக்க வேண்டும், அதனை விடுத்து என் மீதும் என் சமூகத்தின் மீதும் இதனை திசை திருப்பி திணிக்க பார்க்கின்றனர். ஆனால் இந் நாட்டில் வாழும் ஒட்டுமொத்த முஸ்லிம்களும் இதனை கண்டித்தது மாத்திரமின்றி பயங்கவாதிகளை காட்டிக்கொடுத்து அதனை இல்லாது ஒழிப்பதற்கும் ஒத்துழைப்பு வழங்கியுள்ளோம்.
இஸ்லாத்தில் அடிப்படை வாதம் இல்லை. இஸ்லாத்தில் பயங்கரவாதமில்லை 54 முஸ்லிம் நாடுகளை அழிப்பதற்கும் அவர்களின் நிம்மதியை தொலைப்பதற்குமே இந்த ஐ.எஸ்.ஐ.எஸ் ஏஜண்டுகள் உருவாக்கப்பட்டனர். அதுரலிய ரத்ண தேரர் கூறுவது போல் இஸ்லாத்தில் பயங்கரவாதம் என்று ஒன்று இல்லை ! தாக்குதல் நடைபெற்று 20 நாட்களின் பின்னர் முஸ்லிம்களின் சொத்துக்களை காடையர்கள் சூறையாடினார்கள், உயிர்ப்பலி எடுத்தார்கள். தென்னிலங்கையில் பாடசாலை ஒன்றுக்குள் நுழைந்த தந்தை ஒருவரை சுட்டுக்கொன்ற இராணுவத்தினருக்கு, முஸ்லிம்களின் சொத்துக்கள் குருநாகலில் சூறையாடப்பட்ட போது ஒன்றுமே செய்ய முடியாமல் போனது ஏன்? அவர்களின் துப்பாக்கிகள் இயங்க மறுத்தது ஏன்? பள்ளிவாசல்களையும் கடைகளையும் தாக்கிய காடையர்களுக்கு எதிராக ஆயுதங்களை நீட்ட இராணுவம் மெளனம் சாதித்தது ஏன்? இந்த அராஜகத்துடன் தொடர்புடைய 300ற்கும் மேற்பட்டோர் இனம் காணப்பட்ட போதும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் விடுதலை செய்யப்பட்டனரே. இதுதானா நாட்டின் ஜனநாயகம் ? இந்த தவறு அரசியலுக்காக செய்யப்பட்டிருக்குமேயானால் இறைவன் உங்களை தண்டித்தே ஆகுவான்
மஹிந்த ராஜபாக்‌ஷ அவர்களை தோற்கடிப்பதற்கு வரிந்துகட்டிக்கொண்டிருந்தவர் ரத்ன தேரர் இப்போது பிரதமராக இருக்கும் ரணிலை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று கச்சை கட்டிக்கொண்டு திரிபவரும் அவரே. தேர்தல் ஒன்றில் தனித்து நின்று வெல்ல முடியாதவர்கள் தான் இவர்கள். என்னை பொறுத்த வரையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலோ, ஐக்கிய தேசிய கட்சியிலோ போட்டியிட வேண்டிய தேவை இல்லை. எனது கட்சியில் தனித்து நின்று போட்டியிட்டு வெற்றிபெறக்கூடிய சக்தியை இறைவன் தந்துள்ளான். அதிக பட்ச பாராளுமன்ற உறுப்பினர்களையும் நாங்கள் பெறுவோம்.
பெளத்த மத கோட்பாடுகளுக்கு மாறாக உண்ணாவிரம் இருந்து இனவாதத்தை அதுரலிய கக்குகின்றார். யாழ்ப்பாணம்,கல்முறைக்குச் சென்று தமிழ் முஸ்லிம் உறவை சீர் குலைக்க முயற்சிக்கின்றார். எங்கள் இரு சமூகங்களுக்கிடையிலயான நியாயமான பிரச்சினைகளை நாங்கள் பேசி தீர்ப்போம். எனக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் போது, சம்பந்தன் ஐயாவை நான் சந்தித்தேன் “தம்பி! உன்னுடைய சமூகம் துன்பத்தில் இருக்கின்றது. இந்த நாட்டில் உள்ள முஸ்லிம்களோ, முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களோ பயங்கரவாத்துடன் எந்த தொடர்பும் இல்லாதவர்கள். இனவாதிகள் முஸ்லிம் சமுதாயத்தை நசுக்கின்றார்கள். சமுதாயத்திற்காக பேசும் உனது குரலை நெருக்க பார்க்கின்றார்கள் உனது பாதுகாப்பு எப்படி இருக்கின்றது ? பாதுகாப்பில் நீ கவனம் செலுத்து தம்பி! ”என அவர் மிகவும் அன்பாக என்னை ஆறுதல் படுத்தினார். சிறுபான்மை மக்களின் அரசியல் தலைவரான உன்னை வீழ்த்துவதற்கான சதிக்கு நாங்கள் ஒரு போதும் இடமளிக்க மாட்டோம். அவர் தான் சம்பந்தன் ஐயா! எமக்கு இடையே அரசியல் ரீதியான வேறுபாடுகள் இருந்த போதும், அநியாயமான அபாண்டங்களுக்கு அவர் துணைபோக மாட்டேன் என கூறியமை முஸ்லிம் சமூகத்திற்கு கிடைத்த கெளரவமே.
டாக்டர், ஷாபியின் விவகாரத்தில் அவர் குற்றம் விளைவித்திருந்தால் தண்டனை வழங்குங்கள்.ஆனால், நீங்கள் விரும்பும் தீர்ப்பை பொலிஸோ, நீதிமன்றமோ வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் ஆர்ப்பாட்டம் செய்யாதீர்கள். ரத்ன தேரர் குருநாகலுக்கு சென்று அதையே செய்கிறார். கடந்த 4ஆம் திகதி வஹாபிசம் எனும் போராட்டத்தை கையில் எடுத்துக்கொண்டுள்ளனர். அரசியல் வங்குரோத்தில் உள்ள தலைவர் ஒருவர் இவ்வாறு துள்ளி குத்திக்கின்றார். அவர் தனது கட்சி சின்னத்தில் தனித்து நின்று வெற்றியீட்டுவாரா? காத்தான்குடியில் 20 பேரை ஷரீஆ சட்டத்தின் கீழ் மரண தண்டனை விதிக்கப்பட்டதாக ஒரு தேரர் பேசுகின்றார். இன்னும் ஓர் உயர் பெளத்த மதகுரு ஷாபியை கல்லால் எறிந்து கொள்ள வேண்டும் என நாக்கூசாமல் சொல்லுகின்றார் இவைகள் எல்லாம் எத்தனை அபத்தமான குற்றச்சாட்டுக்கள். ஷரிஆ மரண தண்டனை குற்றச்சாட்டை சுமத்திய தேரருக்கு எதிராக இந்த உயர் சபை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் பெண்களின் கல்வி தடை செய்யப்பட்டுள்ளதாக அதுரலிய ரத்ண தேரர் கூறுகின்றார் . இஸ்லாத்தில் பெண்களின் கல்வியை தடை செய்ய எங்கும் கூறப்படவில்லை.
எனது அரசியல் வரலாற்றில் ராஜபக்‌ஷ குடும்பத்திற்கு எதிராகவோ, எஸ் பி திஸ்ஸநாயக்கவுக்கு எதிராகவோ, விமல் வீரவன்சாவுக்கு எதிராகவோ, அல்லது எந்த ஒரு அரசியல் வாதிக்கு எதிராகவோ தனிப்பட்ட ரீதியில் குற்றச்சாட்டுக்களை சுமத்தியவன் அல்ல அவ்வாறான வரலாறு எனக்கு கிடையாது இனியும் அவ்வாறு பேச மாட்டேன். ஆனால் என் மீது தொடர்ந்து எத்தனை எறிகணைகளை வீசுகின்றீர்கள். மோசமாக தாக்குகின்றீர்கள். சுனாமி, இயற்கை அழிவுகளில் முஸ்லிம் நாடுகள் வழங்கிய அத்தனை உதவிகளையும் மறந்து இப்போது அந்த நாடுகளுக்கு எதிராக பழிகளை சுமத்துகின்றீர்கள்.
கல்முனைக்குச் சென்று, அரபுநாடுகளின் பெற்றோல் தேவையில்லை எனவும் சூரிய ஒளி வெப்பத்தின் ஊடாக பெற்றோல்களை பெற முடியும் எனவும் அதுரலிய தேரர் கூறுவது வேடிக்கையாக இருக்கின்றது.

Related Post