Breaking
Tue. Nov 19th, 2024

பாடசாலைகளின் வளங்களையும், கட்டிடங்களையும் பெருக்குவதில் நாம் அக்கறை காட்டும் அதேவேளை, மாணவர்களை கல்வியில் ஊக்கப்படுத்தி உரிய அடைவு மட்டத்தைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்பதே சமூக முன்னேற்றத்துக்கு வழிவகுக்குமென கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

கிளிநொச்சி மற்றும் வன்னி மாவாட்டங்களில் மாணவர்கள் ஓலைக் கொட்டில்களிலும், அகதி முகாம்களிலும் மின்சாரம் உட்பட அடிப்படை வசதிகளின்றி வாழ்ந்த போதும், அவர்கள் கல்வியிலே முன்னேற்றமடைந்து வருவதற்கு கல்வி மீது கொண்ட ஆர்வமும், ஊக்கமுமே காரணமாகும் என்று அவர் மேலும் கூறினார்.

பொலன்னறுவை, கலெல்ல அல்/அஸ்ஹர் வித்தியாலயத்தின் புதிய நிருவாகக் கட்டிடத் தொகுதியின் திறப்புவிழாவின் பின்னர் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

பாடசாலை அதிபர் கலீல் தலைமையில் இன்று (03) இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில், பிரதி அமைச்சர் அலிசாஹிர் மௌலானா, முன்னாள் பிரதியமைச்சர் ஹுஸைன் பைலா, பொலன்னறுவை நகரசபையின் உபதலைவர் அரபா, பொலன்னறுவை பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் பாயிஸ் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றிருந்தனர்.

இங்கு உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது,

முறையான கல்வி கற்றலுக்கு வளங்கள் இன்றியமையாத போதும், மாணவர்கள் கல்வியில் ஊக்கமின்றி இருந்தால் பாடசாலைகளில் சிறந்த பெறுபேற்றை ஈட்ட முடியாது.

பொலன்னறுவை மாவட்டத்தில் உள்ள நமது சமூகத்தவர்களில் பெரும்பாலானோர் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்பவர்கள். வாழ்வாதாரத்திலே பின்தங்கிய நிலையில் இருக்கின்றனர். அத்துடன், இந்த மாவட்டத்தில் வாழும் பெண்கள் குறிப்பாக, நமது சமூகத்தைச் சார்ந்த பெண்களில் அதிகமானோர் வெளிநாடுகளிலே பணிப்பெண்களாக வேலை செய்வதாக அறிகின்றோம். வறுமையும், கணவன்மாரின் அசிரத்தையுமே இதற்குப் பிரதான காரணங்களாகும். நமது சமூகத்தின் இந்த அவலநிலை மாற்றியமைக்கப்பட வேண்டும்.

 

இந்தக் குடும்பப் பெண்கள் தமது பிள்ளைகளை சொந்த நாட்டில் விட்டுவிட்டு, தூர தேசங்களில் தொழில் புரிவது சமூக வளர்ச்சிக்கு ஆரோக்கியமானதல்ல. குழந்தைகளை ஒழுங்கான முறையில் பராமரிப்பதற்கும், அவர்களை நல்லொழுக்கம் உள்ளவர்களாக  வளர்த்தெடுப்பதற்கும், அவர்களுக்குச் சிறந்த கல்வியைப் பெற்றுக்கொடுப்பதற்கும் தாயின் பரிவு அவசியமென்பதை ஒவ்வொரு பிரஜையும் உணர்ந்துகொள்ள வேண்டும்.

இந்த மாவட்டத்தில் வாழும் முஸ்லிம்கள் 300 வருடங்களுக்கு மேலான பாரம்பரியத்தைக் கொண்டிருப்பதாக அறிகின்றோம். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வரலாற்றில் என்றுமில்லாதவகையில், வித்தியாசமான முறையில் இந்த மாவட்டத்தில் துரிதகதியிலான அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். அந்தவகையில், இந்த மாவட்டத்தில் வாழும் நமது சமூகத்தவரையும் அவரது அபிவிருத்திக் கருத்திட்டத்தில் உள்வாங்கியிருக்கின்றமை வரவேற்கத்தக்கதாகும்.

 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, ஜனாதிபதியாக உருவாக்குவதில் நமது சமூகத்தின் பங்களிப்பு எவ்வாறாக இருந்ததென்பது எல்லோருக்கும் தெட்டத்தெளிவானது. இந்த மண்ணில் பிறந்து உங்களுடன் வாழ்ந்த ஒருவர், இன்று நாட்டின் அதியுயர் பதவி ஒன்றை வகிப்பது உங்களுக்கு பெருமகிழ்ச்சி அளிக்கும். எனவே, அவரிடம் நீங்கள் உரிமையுடன் உங்கள் தேவைகளைத் தெரிவித்து பயனடைந்துகொள்ளுங்கள் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

-ஊடகப்பிரிவு-

 

 

 

 

 

Related Post