தாய்லாந்தில் பொது வாக்கெடுப்பு நடந்ததில் புதிய அரசியல் அமைப்புக்கு ஆதரவாக 61 சதவீதம் பேர் புதிய அரசியல் அமைப்பை ஏற்றுக் கொள்வதாக குறிப்பிட்டு இருந்ததாக தேர்தல் கமிஷன் தெரிவித்தது.
தாய்லாந்தில் ஜனநாயக ரீதியிலான ஆட்சியை கொண்டுவரும் விதமாக ராணுவ ஆட்சிக்குழு உருவாக்கிய புதிய அரசியல் அமைப்பின் மீது நேற்று நாடு முழுவதும் பொது வாக்கெடுப்பு நடந்தது. அதில், வரைவு அரசியல் அமைப்பை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா? இல்லையா? என்றும் துணைக் கேள்வியாக பிரதமரை தேர்வு செய்வதில் நியமிக்கப்பட்ட செனட், பாராளுமன்ற கீழ் சபையுடன் இணைந்து செயல்பட அனுமதிக்கலாமா? வேண்டாமா? எனவும் கேட்கப்பட்டு இருந்தது.
வாக்குப்பதிவு முடிந்ததும் உடனடியாக ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. நேற்று இரவு 91 சதவீத ஓட்டு எண்ணி முடிக்கப்பட்டபோது வாக்களித்தவர்களில் 61 சதவீதம் பேர் புதிய அரசியல் அமைப்பை ஏற்றுக் கொள்வதாக குறிப்பிட்டு இருந்ததாக தேர்தல் கமிஷன் தெரிவித்தது.
இதனால் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் பிரதமர் செயல்படும் நிலை ஏற்பட்டு இருப்பதாக தாய்லாந்து அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.