ஜே.எம். வஸீர்
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் பங்காளி கட்சியாக அங்கம் வகிக்கும் தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் மலையக மக்கள் முன்னணி ஆகியன அரசாங்கத்தில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளன.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிக்கும் வகையில் இவர்கள் அரசாங்கத்தில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் பழனி திகாம்பரம் மற்றும் தாவரவியல் பொது பொழுதுபோக்கு பிரதி அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன் ஆகியோர் தங்களது பதவி விலகல் கடிதங்களை தயார்படுத்தி வைத்துள்ள நிலையில் அதனை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மலையக மக்களின் காணி, தனி வீட்டுப் பிரச்சினை தொடர்பாக அரசாங்கத்துடன் ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து இவர்கள் அரசாங்கத்தை விட்டு விலகத் தீர்மானித்துள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது கிடைத்த உறுதிப்படுத்தப்பட்ட செய்தியின்படி இன்று மாலை 3.30 மணிக்கு எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெறவுள்ள விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான திகாம்பரம் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோர் மைத்திரிபாலவிற்கு தங்களது ஆதரவை அறிவிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.