Breaking
Tue. Dec 24th, 2024
திடீர் கைதுகள் ஒருவகை சந்தேகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்துகிறது. மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அப்துல்லாஹ் மஹ்றூப்பை, குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நேற்று (15) அதிகாலை கிண்ணியாவில் வைத்து திடீரென  கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர். இதனால் எமது கட்சியின் உறுப்பினர்கள், பொதுமக்களுக்கும் கூட ஒருவகை பீதி ஏற்பட்டுள்ளதாக  மக்கள் காங்கிரஸின் மூதூர் தொகுதி கொள்கைபரப்புச் செயலாளரும், கிண்ணியா நகர சபை உறுப்பினருமான எம்.எம்.மஹ்தி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர்,
“கடந்த காலங்களில், சதொச வாகனத்தை பயன்படுத்திய குற்றத்தின் பேரில் கைது செய்துள்ளதாக தெரியவந்தாலும், முன்னறிவித்தல் இன்றியும் விசாரணைக்கு அழைக்காமையும் திடீர் கைதுகள் ஏற்படுவது மனவேதனை அளிக்கிறது. இதனால் சட்டதிட்டங்களை அமுல்படுத்துவோருக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் பணிப்புரைகளை விடுக்க வேண்டும். சட்டத்தின் முன் அனைவரும் சமமாக நடாத்தப்பட வேண்டும்.
ஏதோ நாட்டின் இறைமைக்கு பங்கம் விளைவித்தோ அல்லது கொலை, பயங்கரவாதக் குற்றம் இருந்திருந்தால் அன்றி வெறுமென அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காகவும் பழி தீர்க்கவும் இவ்வாறான கைதுகளை செய்வது எம்மால் தாங்கிக்கொள்ள முடியாது. தொடர்ந்தும் மக்கள் காங்கிரஸின் பிரபலங்கள் கைது செய்யப்படுவதை ஏற்க முடியாது.
மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனைக் கைது செய்தார்கள். நீதியான நேர்மையான விசாரணைக்கு அழையுங்கள். ஒத்துழைப்பு வழங்காவிட்டால் கைது செய்யலாம். அதைவிடுத்து அப்பட்டமான குற்றங்களைச் சுமத்தி, கைது செய்வதை ஒரு போதும் ஏற்கமுடியாது. பாரிய குற்றங்களை செய்தவர்கள் நாடாளுமன்றத்திலும் வெளியிலும் சுதந்திரமாக நடமாடுகின்றபோது, இவ்வாறான  விடயங்களை வைத்து சிறைவாசம் அனுபவிக்க முற்படுவது கவலை அளிக்கிறது. நாட்டின் சட்டங்களை மதிக்காமல், விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்காமல் போனால் கைது செய்யலாம்.
ஆகையால், சமமான முறையில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற அரசியல் சட்டதிட்டங்களை வழிநடாத்துங்கள்” என்றார்.

Related Post