கடந்த 29ம் திகதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸாரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்து இன்று திருகோணமலை உயர் தொழில்நுட்பவியல் நிறுவனத்தின் மாணவர்களால் கண்டன பேரணி நடத்தப்பட்டது.
திருகோணமலை மத்திய பேரூந்து நிலையத்திலிருந்து காலை 10.30.மணியளவில்ஆரம்பித்த குறித்த பேரணியானது, டொக்கையார்ட் வீதி ஊடாக தபால் நிலைய வீதியை அடைந்து தொடர்ந்து உட்துறைமுக வீதி ஊடாக ஆளுனர் செயலகத்தினை வந்தடைந்தது.
தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றை ஆளுனரிடம் மாணவர்கள் கையளித்தனர்.
பல்வேறுபட்ட கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக மாணவர்களினால் கடந்த வியாழக்கிழமை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதன்போது ஆர்ப்பாட்டக்கார்களை கலைப்பதற்காக பொலிஸார், தண்ணீர் பீய்ச்சியுள்ளதுடன், கண்ணீர்ப்புகைப் பிரயோகம், மற்றும் தடியடி பிரயோகம் என்பனவற்றினை மேற்கொண்டிருந்தனர்.
அதன்போது பல மாணவர்கள் தாக்கப்பட்டமையை கண்டித்தும் உயர்கல்விக்கு நிகரான தமது கல்வித்தரத்தினை உயர்த்துமாறு கோரிக்கை விடுத்தும் மாணவர்களால் குறித்த போராட்டாம் முன்னெடுக்கப்பட்டது.