இன விகிதாசாரப்படி, திருகோணமலை மாவட்டத்தில் தோப்பூர், குறிஞ்சாக்கேணி, புல்மோட்டை ஆகிய மூன்று புதிய பிரதேச செயலகங்கள் உருவாக்கப்பட வேண்டுமென, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவருமான அப்துல்லாஹ் மஹ்ரூப் கோரிக்கை விடுத்தார்.
மூதூர் பிரதேச செயலகத்தின் புதிய கட்டடத்தை, கடந்த திங்கட்கிழமை (21)
திறந்து வைத்து உரையாற்றியபோதே, அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்தார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் தெரிவித்ததாவது,
“திருகோணமலை மாவட்டம், அதிக சனநெரிசலைக் கொண்ட மாவட்டமாகும். அதிக குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. 44 சதவீதம் முஸ்லிம்களும், 32 சதவீதம் தமிழர்களும் 24.5 சதவீதம் சிங்களவர்களும் வாழ்ந்து வருகின்றனர். இதனால், இன விகிதாசாரப்படி மூன்று புதிய பிரதேச செயலகங்கள் இங்கு உருவாக்கப்பட வேண்டிய தேவை உள்ளது.
“ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவிலும் அதிக குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. இதனால் மக்களுக்காக சேவையாற்றுவதில் கிராம அதிகாரிகள் தங்களது வேலைகளை நிறைவேற்றுவதில் விரைவற்ற தன்மை காணப்படுகிறது. எனவே, கிராம சேவகர் பிரிவுகளும் அதிகரிக்கப்பட வேண்டும்.
“மூதூர் பிரதேச செயலகப் பிரிவில் 42கிராம சேவகர் பிரிவுகள் காணப்படுகிறன. இதில் 66 வரையான பிரிவுகள் காணப்பட வேண்டும். கிண்ணியாவில் 32 கிராம சேவகர் பிரிவுகள் காணப்படுகிறன. இவை 53 ஆக அதிகரிக்கப்பட வேண்டும். அதேபோன்று, தம்பலகாமத்தில் 12 கிராம சேவகர் பிரிவுகள் காணப்படுகிறன. இவை 24 ஆக அதிகரிக்கப்பட வேண்டும்.
“புல்மோட்டை, தோப்பூர், குறிஞ்சாக்கேணி போன்றவற்றில் மூன்று பிரதேச செயலகங்களை புதிதாக உருவாக்க வேண்டும் என்ற வாக்குறுதி, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் முன்வைக்கப்பட்டது. அதை அவர் 2004ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போதும் ஜனாதிபதித் தேர்தலின்போது கிண்ணியாவில் வைத்து வாக்குறுதியளித்திருந்தார். ஆனாலும், நிறைவேற்றப்படவில்லை” என்றார்.
இதேவேளை, “நாடளாவிய ரீதியில் மொத்தமாக 332 பிரதேச செயலகங்கள் காணப்படுகின்ற நிலையில், திருகோணமலையில் 11 பிரதேச செயலகங்கள் காணப்படுகிறன” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.