திருக்குர்ஆன் போதனைகளின்படி வாழ்ந்தால் உலகத்தில் அன்பும், அறமும், மனிதநேயமும் தழைத்தோங்கும் – முதல்வர் ஜெயலயலிதா…..!!
திருக்குர்ஆன் போதனைகளின்படி வாழ்ந்தால் உலகத்தில் அன்பும், அறமும், மனிதநேயமும் தழைத்தோங்கும் என்று முதல்வர் ஜெயலயலிதா பக்ரீத் பெருநாள் வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டு ஹஜ் பெருநாள் வாழ்த்து செய்தியில்…
இறைவனுக்காக எதையும் தியாகம் செய்யும் உயரிய எண்ணத்தை பறைசாற்றும் திருநாளாம் பக்ரீத் திருநாளைக் கொண்டாடி மகிழும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
இறைவனே எல்லாம், அவருக்கு இணையாக எதுவும் இல்லை எனும் இறைப்பற்றோடு வாழ்ந்து, இறைவனின் விருப்பத்தையே தனது விருப்பமாகக் கொண்டு, இறைவனின் ஆணைக்கு கட்டுப்பட்டு தனது ஒரே மகன் இஸ்மாயிலை பலியிட துணிந்த இறைத்தூதர் இப்ராஹிம் அவர்களது புனிதமும், அர்ப்பணிப்பும் ஒருங்கே கலந்த தன்னலமற்ற தியாக வாழ்வின் மேன்மையைப் போற்றும் நன்னாளே பக்ரீத் திருநாளாகும்.
ஏழை, எளியோருக்கு உணவளியுங்கள், இனிமையான சொற்களையே பேசுங்கள், உள்ளத்திலிருந்து பகைமையை நீக்குங்கள், பிறரை பற்றி குறை கூறாதீர்கள், தான தர்மம் செய்யுங்கள், தவறிழைப்போரை மன்னித்து விடுங்கள் போன்ற திருக்குரானின் உயரிய போதனைகளை மக்கள் மனதில் நிலை நிறுத்தி உண்மையுடனும், கருணையுடனும் வாழ்ந்தால், உலகில் அன்பும், அறமும், மனிதநேயமும் தழைத்தோங்கும்.
இஸ்லாமியப் பெருமக்கள் மகிழ்வோடு கொண்டாடும் இந்த இனிய திருநாளில், உலகெங்கும் இறை உணர்வும், தியாகச் சிந்தனைகளும் பரவட்டும்; அமைதியும், மகிழ்ச்சியும் மலரட்டும் என வாழ்த்தி, மீண்டும் ஒரு முறை எனது பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
இவ்வாறு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.