Breaking
Sun. Jan 12th, 2025

ஜவ்பர்கான்

மட்டக்களப்பு மாவட்டத்தின் தாழங்குடா பிரதேசத்தில் உணவு ஒவ்வாமையினால் திடீர் சுகயீன முற்றவர்கள் திருமண வீட்டில் உட் கொண்ட உணவு மாதிரிகள் கொழும்பிலுள்ள மருத்துவ ஆய்வு நிலையத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாக மண்முனைப் பற்று (ஆரையம்பதி) சுகாதார வைத்திய அதிகாரி  வி.பவித்ரா தெரிவித்தார்.

 தாழங்குடா பிரதேசத்தில் திருமண வீட்டில் சமைக்கப்பட்ட உணவு மாதிரி மற்றும் இதில் திடீர் சுகயீனமுற்றவரின் மலம் என்பன கொழும்பிலுள்ள மருத்துவ ஆய்வு நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

அத்தோடு மண்முனைப் பற்று(ஆரையம்பதி) சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தைச் சேர்ந்த பொதுச் சுகாதார பரிசோதகர்களான கே.சத்தியானந்தன், ஏ.இளங்கோபன், மற்றும் வி.கணேசன் ஆகிய மூவரும் இந்த வீட்டுக்குச் சென்று ஆரம்பக்கட்ட விசாரணைகளை மேற் கொண்டதுடன் இந்த திருமண வீட்டில் சமைத்த சமையற்காரர்களிடமும் விசாரணைகளை மேற் கொண்டு வாக்கு மூலங்களைப் பெற்றுள்ளதாக மண்முனைப் பற்று (ஆரையம்பதி) சுகாதார வைத்திய அதிகாரி வி.பவித்ரா மேலும் தெரிவித்தார்.

அதே போன்று காத்தான்குடி பொலிசாரும் இது தொடர்பான விசாரணகளை மேற் கொண்டு வருவதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

கடந்த (25.3.2015) புதன்கிழமை தாழங்குடாப் பிரதேசத்திலுள்ள திருமண வீடொன்றில் நண் பகல் உணவு உட்கொண்டோரில் 80 பேர்  உணவு ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்டு  வியாழக்கிழமை  ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Related Post