Breaking
Sun. Dec 22nd, 2024

புத்தளம் அநகாரிக்க தர்மபால ஆரம்ப பாடசாலையில் முதலாம் ஆண்டில் பயிலும் சிறுமியை நபர் ஒருவர் இன்று கடத்திச் சென்றுள்ளார்.
குறித்த நபர் சிறுமியை கடத்திச் சென்று காட்டிற்கு மறைத்து வைத்திருந்த நிலையில், புத்தளம் தலைமையக காவற்துறையினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து நடத்திய தேடுதலை அடுத்து சுமார் இரண்டு மணிநேரத்திற்கு பின்னர் சிறுமி பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.

அத்துடன் சிறுமியை கடத்திச் சென்ற நபர் காட்டில் பதுங்கியிருந்த நிலையில், பிடிக்க முடிந்ததாக புத்தளம் காவற்துறையினர் தெரிவித்தனர்.

மீட்கப்பட்ட சிறுமி புத்தளம் தில்லையடி பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் இரட்டை பிள்ளைகளில் ஒருவர் எனவும் மற்றைய பிள்ளை ஆண் பிள்ளை எனவும் கூறப்படுகிறது.

சிறுமி தினமும் தனது சகோதரனுடன் முச்சக்கர வண்டியில் பாடசாலைக்கு சென்று வீட்டிற்கு திரும்புவது வழமை. எனினும் இன்றைய தினம் சந்தேக நபர் சிறுமியை தந்திரமாக ஏமாற்றி தில்லையடி வேலாங்கன்னி தேவாலயத்திற்கு அருகில் உள்ள அடர்ந்த காட்டுக்குள் அழைத்துச் சென்றுள்ளார்.

இதனையடுத்து பிரதேசவாசிகளும் புத்தளம் தலைமையக காவற்துறையின் போக்குவரத்து அதிகாரிகளுடன் இணைந்து சிறுமியை தேடும் நடவடிக்கையை ஆரம்பித்தனர்.

தேடுதல் ஆரம்பிக்கப்பட்டு சுமார் இரண்டு மணிநேரத்திற்கு பின்னர் சிறுமி காட்டிற்குள் இருந்து அழும் சத்தம் கேட்டுள்ளது. அழுகை சத்தம் கேட்ட திசையை நோக்கி பிரதேச வாசிகள் சென்ற போது சிறுமி அவர்களை நோக்கி ஓடி வந்துள்ளார்.

பிரதேசவாசிகளுடன் சென்ற சிறுமியின் தந்தை சிறுமி தூக்கி கொண்டு அருகில் உள்ள ரயில் பாதைக்கு ஒடி வந்ததுடன் அங்கு கூடியிருந்த சுமார் 2 ஆயிரம் பிரதேசவாசிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

சிறுமியை தாயுடன் காவற்துறை நிலையத்திற்கு அனுப்பி விட்டு, பிரதேசவாசிகளும் காவற்துறையினரும் இணைந்து மீண்டும் காட்டில் தேடுதலை மேற்கொண்டனர். கடும் முயற்சிக்கு பின்னர் சிறுமியை கடத்திச் சென்ற நபரை பிடித்தனர்.

பிரதேசவாசிகள் ஆத்திரமடைந்து செயற்பட்டதன் காரணமாக பிடித்த நபரை காவற்துறை நிலையத்திற்கு கொண்டு செல்ல மேலும் ஒரு மணிநேரம் தாமதமானது. பிரதேசவாசிகள் சந்தேக நபரை கடுமையாக தாக்கியுள்ளனர்.

இந்த சம்பவம் காரணமாக புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் தில்லையடி வேலாங்கன்னி தேவாலயத்திற்கு அருகில் இருந்து ரயில் கடவை வரை பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கைது செய்யப்பட்ட நபர் புத்தளம் பாலாவி பிரதேசத்தை சேர்ந்தவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சந்தேக நபரால் கடத்திச் செல்லப்பட்ட சிறுமியை புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.

Related Post