வறுமைக்கு எதிராகப் போராடி மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்த ஜனாதிபதி அறிமுகப்படுத்தியுள்ள ‘திவிநெகும’ (வாழ்வின் எழுச்சி) வேலைத்திட்டம் வறுமையற்ற இலங்கையை உருவாக்கும் என்பதில் சந்தேகமில்லை என கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.
மஹிந்த சிந்தனைக்கு அமைவாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலுடன் வாழ்வின் எழுச்சி திட்டம் (திவிநெகும) நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்ட நிகழ்வு அண்மையில் வவுனியா பிரதேச சபை சமுர்த்தி சங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வினை பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரதம அதிதியாக கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்தார். இந்நிகழ்வில் அமைச்சர் ரிஷாத் விசேட அதிதியாகக் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்
தார். அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்:
வட மாகாண மக்களை மேம்படுத்துவதற்கான மற்றொரு அபிவிருத்தி முயற்சியான வாழ்வின் எழுச்சித் திட்டம் (திவிநெகும) பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக் ஷ மூலம் மஹிந்த சிந்தனைக்கு அமைவாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலுடன் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
வாழ்வின் எழுச்சித் திட்டத்தை வெற்றிகரமான முறையில் நடைமுறைப்படுத்துவதன் மூலம் கால்நடை உற்பத்தித் தொழிலில் ஈடுபட்டு வரும் விவசாயக் குடும்பங்களுக்கு சிறந்ததொரு வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதற்கு அரசாங்கம் வெற்றிகரமாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் சிறிய மற்றும் நடுத்தர குடிசைக் கைத்தொழில்கள் அபிவிருத்தி செய்யப்படுவதுடன் இதனூடாக தனிநபர் மட்டுமல்லாது நாட்டின் பொருளாதாரமும் மேம்படும்.
இதேவேளை ஐந்து மில்லியன் மக்கள் இதன் விளைவாக பயனடைவார்கள் மேலும் 1.8 மில்லியன் குடும்பங்கள் திவிநெகும மூலம் வறுமைக்கு வெளியே எடுத்துச் செல்லப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2016ஆம் ஆண்டில் வறுமையற்ற இலங்கையை உருவாக்கும் இலக்கினை அடைவதன் ஊடாக சமுதாய சமத்துவத்தை ஏற்படுத்தி வறுமைக்கோட்டுக்குள் வாழும் மக்களை சமூகத்தில்கௌரவமான பிரஜைகளாக உருவாக்க அனைவரும் முயற்சிக்க வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.