Breaking
Fri. Nov 22nd, 2024

கல்முனை மாநகரசபை தீயணைப்பு படையினரின் நிரந்தர நியமனத்திற்கு கிழக்கு மாகாண ஆளுநரின் அனுமதி கோரப்பட்டிருப்பதாக மாநகர ஆணையாளர் ஜெ.லியாகத் அலி தெரிவித்தார்.

தீயணைப்பு படையினருடனான கலந்துரையாடல் நேற்று கல்முனை மாநகரசபையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறினார்,

முன்னாள் முதல்வர் சட்டத்தரணி நிஸாம் காரியப்பரின் பெரும் முயற்சியினால் 2014ஆம் ஆண்டு கல்முனை மாநகரசபைக்கு தீயணைப்பு படைப்பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டது.

அதன்போது அந்த பிரிவில் கடமையாற்றுவற்கு மாநகரசபையினால் 11 பேருக்கு தற்காலிக நியமனம் வழங்கப்பட்டது. அவர்களது நிரந்தர நியமனம் தொடர்பில் விளக்கமளிக்கையிலேயே ஆணையாளர் இதனைக் குறிப்பிட்டார்.

தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

“தீயணைப்பு படையினர், வேறு ஊழியர்கள் போலல்லாமல் எந்த நேரத்திலும் உஷார் நிலையில் இருக்க வேண்டியவர்கள். தீ அனர்த்தம் ஒன்று இடம்பெறும்போது அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக உடனடி செயற்பாட்டில் இறங்காவிட்டால், அது பாரிய விபரீதங்களை ஏற்படுத்தி விடும்.

நீங்கள் தொழில்களைக் கூட இழக்க நேரிடலாம். ஆகையினால் கடமை நேர அட்டவணையை சரியாக பேணி நடக்க வேண்டும். அதேவேளை தீயணைப்பு படையினர் அனைவரும் வாகனங்களை செலுத்தக் கூடியவர்களாக இருப்பதுடன் கனரக வாகன அனுமதிப் பத்திரத்தையம் கொண்டிருக்க வேண்டும்.

உங்களது நிரந்தர நியமனத்திற்காக பாரிய முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. முன்னாள் முதல்வர் நிஸாம் காரியப்பரின் வேண்டுகோளின் பேரில் கிழக்கு மாகாண முதலமைச்சர் மட்டத்தில் இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நியமனங்களை வழங்கும் பொருட்டு ஆளுநரிடம் ஆளணி அங்கீகாரம் கோரப்பட்டுள்ளது. அவரது அனுமதி கிடைத்ததும் மாகாண சபையினால் நிரந்தர நியமனம் வழங்கப்படும்” என்று ஜெ.லியாகத் அலி தெரிவித்தார்.

இந்த கலந்துரையாடலில் மாநகர சபையின் கணக்காளர் ஏ.எச்.தஸ்தீக் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

By

Related Post