புதன்கிழமை சவுதி அரேபியா தனது நாட்டில் தீவிரவாதச் செயல்களுடன் தொடர்புடைய 24 நபர்களுக்கு 2 முதல் 27 வருடங்கள் வரையிலான நீண்ட கால சிறைத் தண்டனை விதித்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
இதில் ஓர் அமெரிக்கரும் யேமென் நாட்டைச் சேர்ந்த ஒருவரும் உள்ளடங்குகின்றனர் என சவுதியின் உத்தியோக பூர்வ செய்தி ஊடகமான SPA அறிவித்துள்ளது.
சிறைத் தண்டனை விதிக்கப் பட்ட கைதிகள் சவுதியின் முக்கிய எண்ணெய் குழாய் வலையமைப்புக்களை அழிக்கத் திட்டம் வகுத்தமை, ஆயுதங்களைத் தாங்கியிருந்தமை, சவுதியிலும் பஹ்ரெயினிலும் தாக்குதல்களைத் திட்டமிட்டமை எனப் பல குற்றச் செயல்களில் தொடர்பு பட்டிருப்பதாக அறிவிக்கப் பட்டுள்ளது. சிறைத் தண்டனை விதிக்கப் பட்ட அமெரிக்கக் குடிமகன் சைபர் குற்றத்துடன் தொடர்புடையவர் என்றும் இவருக்கு 17 வருட தண்டனை விதிக்கப் பட்டுள்ளது என்றும் தெரிய வந்துள்ளது. உலகில் எண்ணெய் வளம் மிக்க நாடுகளில் முக்கியமானதான சவுதியில் சிறுபான்மையினத்தவரான ஷைட்டி முஸ்லிம்கள் 2011 அரபு எழுச்சியுடன் அரசுக்கு எதிராக வலிமை பெறத் தொடங்கியதால் இவர்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க தனது நட்பு நாடுகளான பஹ்ரெய்ன் போன்றவற்றுடன் சவுதி தனது உறவை பலப் படுத்தி வந்தது.
சவுதியின் மொத்த சனத் தொகையில் 20% வீதத்துக்கும் குறைவான ஷைட்டிக்கள் அந்நாட்டின் மிகப் பெரிய எண்ணெய் மற்றும் எரிவாயு வயல்கள் அதிகம் அமைந்துள்ள கிழக்கு மாகாணத்தில் தான் அதிகம் வசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.