Breaking
Fri. Nov 15th, 2024
நாட்டில் சிங்கள முஸ்லிம் கலவரத்தை உருவாக்க மேற்கொள்ளும் சதி முயற்சிகளுக்கு இந்த அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்கக் கூடாதென்றும், இவ்வாறான பிரச்சினைகளை முளையிலேயே கிள்ளி எறிந்துவிட வேண்டுமென்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும், அமைச்சருமான றிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.
நேற்று  (17) குருநாகலில் இடம்பெற்ற பேராளர் மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தனதுரையில் மேலும் கூறியதாவது,
முஸ்லிம் சமூகத்தின் அரசியல் அபிலாசைகளையும் அவர்களுடைய பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பதற்காக மர்ஹூம் அஷ்ரபினால் உருவாக்கப்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சமூகத்திற்கு மாற்றமாக செயற்பட்ட ஒரே ஒரு காரணத்துக்காகவே, அகில இலங்கை மக்கள் காங்கிரசை நாம் உருவாக்கினோம்.
மர்ஹூம் அஷ்ரபின் கண்ணீராலும் வியர்வையினாலும் உருவாக்கப்பட்ட அந்த அமைப்பு அவரின் மறைவின் பின்னர் பிழையான பாதையிலே பயணிக்கத் தொடங்கியுள்ளது.
முஸ்லிம் சமூகத்தை ஜனநாயக ரீதியாக ஒன்றுபடுத்தி ஆயுதப் போராட்டத்துக்கோ, பிரிவினைவாதத்துக்கோ,அந்த சமூகத்தின் இளைஞர்கள் பிரவேசித்து விடக்கூடாது என்ற நோக்கத்துக்காக மர்ஹூம் அஷ்ரப் அப்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை ஆரம்பித்தார்.
இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் என்றுமே ஆயுதப் போராட்டத்தில் நாட்டம் கொண்டவர்கள் அல்லர்.
சிங்கள் இளைஞர்கள் ஆயுதம் தூக்கிய போதும், தமிழ் இளைஞர்கள் இந்த நாட்டை பிளவுபடுத்துவதற்காக ஆயுதம் தூக்கிய போதும் அவர்கள் நடுநிலையாக நின்று சிந்தித்து செயற்பட்டவர்கள்.
எமது மூதாதையர்கள் போல நாமும் நாட்டுப்பற்றுடன் வாழ்ந்தவர்கள்.
டி.பி.ஜாயா தொடக்கம் அதன் பின் வழி வந்த அத்தனை முஸ்லிம் தலைவர்களும், அவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்தால் என்ன, சுதந்திரக் கட்சியில் இருந்தால் என்ன, நாட்டுப்பற்றுடன் வாழ்ந்து தமது சமூகத்தையும் வழிநடத்தியவர்கள்.
அவ்வாறான ஒரு சமூகத்தை இன்று கேவலப்படுத்த சில பிற்போக்குவாதிகள் முனைந்து வருகின்றனர்.
இலங்கையில் ஐ.எஸ் தீவிரவாதிகளும், தலிபான்களும் ஊடுருவியுள்ளதாகவும், அதற்கு இலங்கை முஸ்லிம்கள் துணை போகின்றனர் என்றும் வீண் கட்டுக்கதைகளை பரப்பி இங்கு கலவரங்களை உருவாக்க திட்டமிடுகின்றனர்.
நாங்கள் தீவிரவாதத்துக்கு இஸ்லாமிய தீவிரவாதத்துக்கோ ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை.
இந்த மாநாட்டில் தவிசாளர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியினால் கட்சியின் யாப்புத் திருத்த வரைபு வாசிக்கப்பட்டது. கட்சியின் உயர்மட்ட உறுப்பினர்கள் உட்பட கட்சி ஆதரவாளர்கள் என் பெருந்திரளானோர் இம்மாநாட்டில் கலந்து கொண்டிருந்தனர்.

By

Related Post