துபாய் விமான தீவிபத்துக்கு தரை இறங்கும்போது விமானத்தின் சக்கரங்கள் செயல்படாததே காரணம் என சர்வதேச குழுவின் முதற்கட்ட ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
துபாய் சர்வதேச விமான நிலையத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் 3-ந் தேதி திருவனந்தபுரத்தில் இருந்து சென்ற எமிரேட்ஸ் நிறுவன விமானம் தரைஇறங்கும்போது விபத்தில் சிக்கி தீப்பிடித்தது. பயணிகள் அவசரகால வழிகளில் உடனே வெளியேற்றப்பட்டதால் உயிர்தப்பினர். மீட்புப்பணியில் தீயணைப்பு படை வீரர் ஒருவர் பலியானார்.
இந்த விபத்துக்கான காரணம் பற்றி துபாய் விமான போக்குவரத்து ஆணையத்தின் மேற்பார்வையில் சர்வதேச குழுவினர் ஆய்வு செய்தனர். ஒரு மாத ஆய்வுக்கு பிறகு முதற்கட்ட அறிக்கையை குழுவினர் தாக்கல் செய்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
இந்த விபத்தில் தீப்பிடித்த எமிரேட்ஸ் விமானத்தை சோதனையிட தனிமைப்படுத்தப்பட்டது. விமானத்தின் கருப்புப்பெட்டி பதிவுகள் மற்றும் வானிலை ஆய்வு மையத்தின் தகவல்கள் அறியப்பட்டன. அந்த விமானம் தரையிறங்கும்போது, அதன் வால் பகுதி காற்றின் பலமான தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது. இதனால் நிலைதடுமாறிய விமானத்தை ஓடுதளத்தில் நேராக இயக்க முடியவில்லை.
பின்சக்கரங்கள் ஒரே நேரத்தில் தரையை தொடவேண்டும். ஆனால் வலதுபுற பின்சக்கரங்கள் மட்டும் முதலில் தரையை தொட்டது. இடதுபுற பின்சக்கரங்கள் 3 வினாடிகள் தாமதமாக தரையை தொட்டது. இந்த நேரத்தில் விமானத்தின் முன்சக்கரங்கள் தரையை தொடாமல் இருந்தன.
விமானத்தின் முன்சக்கரத்தில் தீ மற்றும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தரையிறங்க சிறிது தாமதமாகும் என எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. முதல்முறை தரை இறங்க முயற்சிக்கப்பட்டு முன்சக்கரத்தில் கோளாறு ஏற்பட்டதால் மீண்டும் 85 அடி தூரம் விமானத்தை அந்தரத்திலேயே தரையிறக்காமல் வைத்து இருந்துள்ளனர்.
6 வினாடிகள் கழித்து முன்சக்கரம் திரும்ப விமானத்தின் உள்ளே சென்றுவிட்டது. இந்த நேரத்தில் விமானம் வேகத்தை இழந்ததால் விமானிகள் இரு ஜெட் என்ஜின்களையும் வேகமாக இயக்க ஆரம்பித்துள்ளனர். ஆனால் அதற்குள் விமானம் தரையைத் தொடவேண்டிய கட்டாயம் காரணமாக ஓடுதளத்தில் தரையிறக்கப்பட்டது. அப்போது முன்சக்கரங்கள் இருந்த பகுதியை திறக்க முடியாததால் விமானத்தின் முன்பகுதி ஓடுதளத்தில் மோதியும், என்ஜின் அதிவேகமாக இயக்கப்பட்டதாலும் தீப்பிடித்துள்ளது.