Breaking
Mon. Dec 23rd, 2024

துபாய்: கடந்த ஆண்டு முழுவதும் போக்குவரத்து விதிகளை மீறாமல் பாதுகாப்பாக வாகனங்களை ஓட்டிய இருவருக்கு புத்தம் புதிய கார்களை பரிசாக அளித்து பாராட்டியுள்ளது துபாய் போலீஸ்.

போக்குவரத்து விதிகளை மீறாமல் இருக்கும் வாகன ஓட்டிகளுக்கு புத்தம் புதிய காரை பரிசாக அளிக்கும் ஒயிட் பாயிண்ட் சிஸ்டம் என்ற திட்டத்தை துபாய் போலீசார் கடந்த 2012ம் ஆண்டு அறிமுகப்படுத்தினர்.

இந்த திட்டத்தின்படி ஒரு ஆண்டு முழுவதும் போக்குவரத்து விதிகளை மீறாமல் பாதுகாப்பாக வாகனம் ஓட்டியவர்களின் பெயர்கள் ஒரு பெட்டிக்குள் போட்டு குலுக்கல் முறையில் ஒருவர் தேர்வு செய்யப்படுவார்.

தேர்வு செய்யப்படும் நபருக்கு போலீசார் புத்தம் புதிய காரை பரிசளித்து பாராட்டுவார்கள். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான பாராட்டு விழா ஞாயிற்றுக்கிழமை துபாயில் நடைபெற்றது. இந்த ஆண்டு குலுக்கலில் இரண்டு பேரின் பெயர்களை தேர்வு செய்தார் மன்னர் ஷேக் மன்சூர் பின் முகமது பின் ராஷித் அல் மக்தூம்.

தேர்வு செய்யப்பட்ட லைலா அல் பலூஷி மற்றும் ஆத்திக் முபாரக் ஆகியோருக்கு கார்கள் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் கடந்த ஆண்டு முழுவதும் போக்குவரத்து விதிகளை மீறாமல் இருந்த 1, 500 பேருக்கு சிறப்பு பரிசு அளிக்கப்பட்டது.

இந்த ஒயிட் பாயிண்ட் சிஸ்டம் மூலம் விபத்துகள் குறைந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். நிகழ்ச்சி குறித்த புகைப்படத்தை துபாய் போலீசார் தங்களின் ட்விட்டர் கணக்கில் வெளியிட்டுள்ளனர்.

Related Post