ஸாதிக் ஷிஹான்
நாட்டில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி பணிகளில் யுத்த வெற்றிக்கு பங்களிப்பு செய்த படை வீரர்களையே பயன் படுத்துவதாக கூறப்படும் தகவல்களில் எவ்வித உண்மையும் கிடையாது என்று பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.
இவ்வாறு யுத்தத்திற்கு பங்களிப்பு செய்த இராணுவத் தினரை கூலி வேலையில் அமர்த்துவதாகவும், தரக்குறைவாக நடத்துவதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டு க்களை முற்றாக மறுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். மாறாக யுத்தத்திற்கு பிறகு தொழில் ரீதியாக நிர்மாணத் துறை நடவடிக் கைகளுக்கென மாத்திரம் 20 ஆயிரம் பேர் இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டனர்.
இவர் களே அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்க ஈடுபடுத்தப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். பாதுகாப்பு மற்றும் சமகால நிகழ்வுகள் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாடு பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தில் இடம்பெற்றது. பிரிகேடியர் இங்கு மேலும் விளக்கமளிக்கையில்,
தாய் நாட்டை பாதுகாக்க அர்ப்பணிப் புடன் செயற்பட்ட இராணுவ வீரர்களை தரக்குறைவாக நடத்துவதாகவும், வீதிகளில் இறக்கி அபிவிருத்தி பணிகளில் ஈடுபடுத்துவதாகவும் சிலர் தவறான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர். ஆனால் உண்மை அவ்வாறல்ல, யுத்தம் முடிவுற்ற பின்னர் நாட்டின் அபிவிருத்தி தேவையை கருத்திற் கொண்டு அதற்கு பங்களிப்பு செய்யும் வகையில் நிர்மாண துறைக்கு 20 ஆயிரம் பேர் இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டனர்.
இவ்வாறு இணைத்துக் கொள்ளப்பட்டவர்களே இந்த பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் யுத்தத்தின் போது சிறந்த முறையில் தலைமைத்துவம் வழங்கிய அதிகாரிகளே இந்த படைவீரர்களை வழிநடாத்த ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இராணுவத்தினர் என்பவர்கள் யுத்த களமுனையில் துப்பாக்கி ஏந்தி செல்பவர்கள் மாத்திரமல்ல, மாறாக சகல துறைகளிலும் திறமைகளைக் கொண்டவர்கள் ஆவர் என்றார்.
இதேவேளை, ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில், வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் நிலை கொண்டுள்ள பாதுகாப்பு படையினர் நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் மக்களின் நலனை கருத்திற் கொண்டே செயற்படுகின்றனர். பாதுகாப்பு படையினர் எந்த சந்தர்ப்பத்திலும் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயற்படவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.