பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.
அவரிடம் பெற்றுக் கொள்ளப்பட்ட தகவல்களின் அடிப்படையில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக அஜித் ரோஹன கூறியுள்ளார்.
போதைப் பொருள் கடத்தலுடன் தொடர்புடைய வேலேசுதா என்பவர் வழங்கிய தகவலின் அடிப்படையில், துமிந்த சில்வாவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டனர்.
கடந்த 3 நாட்கள் சுமார் 20 மணித்தியாலங்கள் இவ் விசாரணைகள் இடம்பெற்றன.
துமிந்த சில்வாவிடம் அடிக்கடி விசாரணைகள் நடைபெற்ற போதும் அவர் கைதுசெய்யப்படாமை குறித்து, மேல் மாகாண சபை உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர அண்மையில் அதிருப்தி வௌியிட்டார்.
எதுஎவ்வாறு இருப்பினும் சந்தேகநபர் ஒருவரை கைதுசெய்து நீதிமன்றத்தின் முன் நிறுத்தினால், உரிய சாட்சிகள் இல்லாவிடில் அவர் பிணையில் வௌியில் வரமுடியும் என அஜித் ரோஹன சுட்டிக்காட்டினார்.
எனவே போதுமான சாட்சிகளுடன் சந்தேகநபரை கைதுசெய்து நீதிமன்றத்தின் முன் நிறுத்திய பின்னர் நீண்ட விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு அவர் குற்றவாளியா அல்லது நிரபராதியா என தீர்மானிப்பதே முக்கியம் எனவும் அவர் கூறியுள்ளார்.