ஆளும் கட்சியின் அமைச்சுப் பதவிகளை துறந்து எதிர்க்கட்சியுடன் அண்மையில் துமிந்த திஸாநாயக்க இணைந்து கொண்டிருந்தார்.
துமிந்தவின் பாதுகாப்பு அதிகாரியாக கடமையாற்றிய பொலிஸ் பரிசோதகர்கள் உள்ளிட்ட 20 உத்தியோகத்தர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அரசியல் ரீதியான நோக்கங்களுக்காக இவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அனுராதபுரம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்தவர்கள், திடீரென தூரப் பிரதேசங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
துமிந்த திஸாநாயக்கவிற்கு பாதுகாப்பு அளித்து வந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் அனுராதபுரம் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு, பின்னர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இடமாற்ற உத்தரவு பிறப்பிப்பது சட்டவிரோதமானது என்ற போதிலும், குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
துமிந்த திஸாநாயக்கவின் பாதுகாப்பு அதிகாரிகளாக கடமையாற்றியவர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டமை மனித உரிமை மீறலாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சட்டவிரோதமான முறையில் இடமாற்றம் செய்யப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று மாலை வரையில் முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவிற்கு ஒரு பொலிஸ் உத்தியோகத்தரேனும் பாதுகாப்பிற்காக கடமையில் ஈடுபடுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.