Breaking
Mon. Dec 23rd, 2024

துருக்கி நாட்டில் மக்கள் துணையுடன் ராணுவ புரட்சி முறியடிக்கப்பட்டது. ராணுவத்துடனான மோதலில் 265 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். 3 ஆயிரம் வீரர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

துருக்கி, தொடர்ந்து 4 முறை ராணுவ புரட்சிகளால் பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடு.

அங்கு நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) மீண்டும் ராணுவ புரட்சிக்கான முயற்சியாக ராணுவத்தில் ஒரு பிரிவினர் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.

அந்த நாட்டின் மிகப்பெரிய நகரமான இஸ்தான்புல் நகரத்தில் உள்ள பாஸ்போரஸ் ஜலசந்தி மீதுள்ள 2 பாலங்களில் டாங்கிகளை நிறுத்தி, அவர்கள் ஆட்சி கவிழ்ப்பு முயற்சியை இரவு 7.20 மணிக்கு தொடங்கினர். இதனால் போக்குவரத்து திருப்பி விடப்பட்டது.

தலைநகர் அங்காராவிலும், இஸ்தான்புல் நகரிலும் அடுத்தடுத்து துப்பாக்கிச்சூடுகள், குண்டு வெடிப்புகள் நடந்தன. வீதிகளில் ராணுவத்தினர் அணிவகுத்தனர். அங்காரா நகரின் மீது ராணுவ விமானங்கள் தாழ்வாக பறந்தன.

அதைத் தொடர்ந்து அங்கு ராணுவ புரட்சிக்கான முயற்சி நடைபெறுவதாக பிரதமர் பினாலி யில்டிரிம் அறிவித்தார். ராணுவத்தில் உள்ள ஒரு பிரிவினர் புரட்சி முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகவும், அரசு படைகள் பதிலடி தருவதற்கு அழைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

கிளர்ச்சி தொடங்கிய ஒரு மணி நேரத்தில் ராணுவ பிரிவு ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில், ‘நாட்டை அமைதிக்கவுன்சில் வழிநடத்துகிறது. ஊரடங்கும், ராணுவ சட்டமும் அமல்படுத்தப்படும்; அரசியல் சட்ட ஒழுங்கையும், ஜனநாயகத்தையும், மனித உரிமைகளையும், சுதந்திரத்தையும் நிலை நாட்டுவதற்காகத்தான் இந்த புரட்சி’ என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ராணுவ புரட்சி முயற்சிக்கு மத்தியில், அதிபர் தய்யீப் எர்டோகன் பாதுகாப்பாக இருப்பதாக தகவல் வெளியானது. அதுமட்டுமின்றி புரட்சி நடைபெற்றிருப்பதாக ராணுவ தரப்பில் வெளியான தகவல், ராணுவ தலைமையின் அங்கீகாரத்தை பெறாத ஒன்று என கூறப்பட்டது. பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டன.

ராணுவ புரட்சிக்கான முயற்சி தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில், அந்த நாட்டின் அதிபர் எர்டோகன், மார்மாரிஸ் என்ற சுற்றுலா தலத்தில் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தார். புரட்சி முயற்சி பற்றி தகவல் கிடைத்ததும், அவர் தனது செல்போன் வழியாக நாட்டு மக்களுக்கு செய்தி விடுத்தார்.

அது டெலிவிஷனில் ஒளிபரப்பானது. அதில் அவர், ராணுவ புரட்சியை எதிர்த்து மக்கள் கிளர்ந்தெழ வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். பின்னர் அவர் அங்கிருந்து இஸ்தான்புல் நகருக்கு புறப்பட்டார். அவரது அழைப்பை ஏற்று நாட்டு மக்கள் களத்தில் இறங்கி கிளர்ச்சியாளர்களுடன் சண்டையிட்டனர். இதனால் பல இடங்களில் ராணுவத்தினர் கிளர்ச்சியை கை விட்டு சரண் அடைந்தனர்.

அங்காராவில் உள்ள அதிபர் மாளிகை, பாராளுமன்ற கட்டிடம் கடுமையாக தாக்கப்பட்டன. பாராளுமன்ற வளாகத்தில் குண்டுவெடிப்பும் நடந்தது. எம்.பி.க்கள் பாதுகாப்பான இடங்களில் பதுங்கிக்கொண்டனர். அந்த நகரின் மத்தியில் பெரும் சத்தத்துடன் குண்டுகள் வெடித்தன.

பாராளுமன்றம் பெரும் சேதம் அடைந்தது. இஸ்தான்புல் போலீஸ் தலைமையகத்தின் வெளியே துப்பாக்கிச்சண்டை நடந்தது. விமான நிலையத்தின் வெளியே டாங்கிகள் நிறுத்தப்பட்டிருந்தன.

இஸ்தான்புல் நகரின் மையத்தில் உள்ள தாக்சிம் சதுக்கத்தில் கடுமையான துப்பாக்கிச்சண்டையும், குண்டுவெடிப்புகளும் தொடர்ந்து நடைபெற்றன. அங்காராவில் கிளர்ச்சியாளர்களின் ஹெலிகாப்டர் ஒன்று, படை வீரர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டது. எங்கு பார்த்தாலும் கலகங்கள் நடந்தன. மக்களிடையே பெரும் குழப்பம் நிலவியது.

நள்ளிரவு 12.45 மணிக்கு ராணுவ புரட்சிக்கு முயற்சித்த பிரிவில் ஒரு குழு, போலீஸ் படைகள் முன் சரண் அடைந்தது.

அதிகாலை ஒரு மணிக்கு இஸ்தான்புல் வந்து சேர்ந்த அதிபர் எர்டோகன், விமான நிலையத்தில் ஆதரவாளர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர், “நடந்து கொண்டிருப்பது தேசத்துரோகமும், கிளர்ச்சியும் ஆகும். அதை நடத்துகிறவர்கள், அதற்கான கடும் விளைவை சந்திப்பார்கள்” என எச்சரித்தார்.

கோல்கக் என்ற கடற்படை தளத்தில் ஒரு போர்க்கப்பலை அரசு எதிர்ப்பு கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றி விட்டதாக கிரீஸ் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. இரவில் நடந்த மோதல்களில் மட்டுமே 104 கிளர்ச்சி படையினர் கொல்லப்பட்டனர் என தகவல்கள் கூறுகின்றன.

புரட்சி முயற்சியை எதிர்த்து கிளர்ச்சியாளர்கள் போராட்டம் நடத்தியபோது, அவர் களை நோக்கி கிளர்ச்சியாளர்கள் ஆத்திரத்தில் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.

அதிபர் மாளிகைக்கு வெளியே கிளர்ச்சியாளர்கள் நிறுத்தி இருந்த பீரங்கிகள் மீது ‘எப்-16’ ரக போர் விமானங்கள் வான்தாக்குதல்கள் நடத்தின.

நேற்று காலையிலும் சிறிது நேரம் பல இடங்களில் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது.

இறுதியில் ராணுவ புரட்சி முயற்சியை மக்கள் முறியடித்து விட்டதாகவும், அதிபரும், அரசாங்கமும் நாட்டின் பொறுப்பில் உள்ளதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியது.

“நிலைமை முழுக்கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டது, அரசு படைத்தளபதிகள் மீண்டும் பொறுப்புக்கு வந்து விட்டனர்” என்று காலை 10.20 மணிக்கு பிரதமர் யில்டிரிம் அறிவித்தார்.

“ராணுவ புரட்சி முயற்சியினால் நடந்த மோதல்களில் 161 பேர் கொல்லப்பட்டனர், 1,440 பேர் காயம் அடைந்தனர். புரட்சி முயற்சியில் ஈடுபட்ட ராணுவ அதிகாரிகள், வீரர்கள் என 2,839 பேர் கைது செய்யப்பட்டனர்” என பிரதமர் யில்டிரிம் அறிவித்தார்.

இருப்பினும் 265 பேர் பலியாகி உள்ளதாக கடைசியாக கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.

இந்த புரட்சி முயற்சிக்கு அமெரிக்காவில் பென்சில் வேனியா மாகாணத்தில் தங்கியுள்ள துருக்கி மத குரு பெதுல்லா குலன் என்பவர் தான் காரணம், அவர் பல்லாண்டு காலமாக ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என பிரதமர் யில்டிரிம் குற்றம் சாட்டினார்.

ஆனால் இதில் சதி எதுவும் இல்லை என மறுப்பும் வந்துள்ளது.

“துருக்கி மக்கள் அமைதி காக்க வேண்டும்” என்று அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவும், உலகத்தலைவர்களும் கேட்டுக்கொண்டுள்ளனர். ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு மக்கள் ஆதரவுக்கரம் நீட்ட வேண்டும் என்றும் அவர்கள் வேண்டிக்கொண்டுள்ளனர்.

By

Related Post