கொழும்பு துறைமுகம் உள்ளடங்கலான அனைத்து துறைமுகங்களினதும் பாதுகாப்பினை உறுதிச் செய்யும் பொருட்டு உடனடியாக நடவடிக்கையெடுக்குமாறு துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் தன்னுடைய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று (8) காலை நடைப்பெற்ற விசேட கலந்துரையாடலில் அமைச்சர் மேலும் குறிப்பிட்டதாவது, கொழும்பு துறைமுகத்தின் பாதுகாப்பை உறுதிச் செய்யும் பொருட்டு பல்வேறுப்பட்ட சவால்களை எதிர்க்கொள்ள நேரிட்டுள்ளது. ஏதேனும் ஆபத்துக்கள் ஏற்படுவதற்கு முன்னர் ஆயத்த நிலையில் இருக்க வேண்டும். மேலும் ஆபத்தான சந்தர்பங்களில் முகங்கொடுக்க நேரிடுகின்ற பிரச்சினைகள் தொடர்பாகவும் நாம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுமென அமைச்சர் அர்ஜீன ரணதுங்க தெரிவித்தார்.
‘ஏதேனும் அழிவு நேர்ந்தால் தான் எங்களுடைய கண்கள் திறக்கும். அண்மையில் இடம்பெற்ற ஆயுத களஞ்சிய வெடிப்புச் சம்பவம் இதற்கான சிறந்த உதாரணமாகும். இச்சம்பவம் மூலமாக நாம் பாடமொன்றை கற்றுக்கொள்ள வேண்டும். எங்களுடைய துறைமுகத்தில் இவ்வாறானதோர் அனர்த்தம் நிகழ்ந்து அது தொடர்பில் கலந்துரையாடல்களை முன்னெடுப்பதை காட்டிலும் அவ்வாறானதோர் அனர்த்தம் நிகழாது காப்பதே சிறந்த செயலாகும். துறைமுகங்கள் மற்றும் விமானநிலையங்கள் தொடர்பாக விசேட அவதானத்தை செலுத்துமாறு ஜனாதிபதி எமக்கு அறிவுரை வழங்கியுள்ளார். நாம் காப்புறுதி தொடர்பாகவே பிரச்சினைகளிற்கும் முகங்கொடுக்கின்றோம்.
துறைமுகத்தினை காப்புறுதிச் செய்தால் 5 ஆண்டுகளாக துறைமுகத்தினால் ஈட்டப்படும் இலாபமும் காப்புறுதி பணமாக செலுத்த போதுமானதாக அமையாது. எனவே எம்மால் இத்துறைமுகத்தை காப்புறுதிச் செய்யவும் இயலாது. செய்தும் இயலாது. இப்பிரச்சினையினை தீர்க்கும் பொருட்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றோமென’ அமைச்சர் அர்ஜீன ரணதுங்க குறிப்பிட்டார்.
துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைப்பெற்ற இக்கலந்துரையாடலில் துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சின் செயலாளர் எல்.பீ.ஜயம்பதி வர்தக கப்பற் செயலக அதிகாரிகள் இலங்கை துறைமுக அதிகாரச் சபையின் அதிகாரிகள் இலங்கை கப்பற் கூட்டுதாபணத்தின் அதிகாரிகள் கடற்படை அதிகாரிகள் பொலிஸ் மற்றும் அதனுடன் தொடர்புடைய நிறுவணங்களின் தலைவர்கள் கலந்துக் கொண்டார்கள்.
இக்கலந்துரையாடலில் கருத்து வெளியிட்ட துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சின் செயலாளர் எல்.பீ.ஜயம்பதி குறிப்பிட்டதாவது துறைமுகத்தை அபிவிருத்திச் செய்வது மாத்திரமன்றி கப்பற் சேவையினை முன்னெடுக்கும் கடற் பாதையினை பாதுகாப்பது தொடர்பாக முன்பை காட்டிலும் தற்சமயம் விசேட அவதானம் செலுத்த வேண்டுமென குறிப்பிட்டார். ‘நாளாந்த கொழும்பு துறைமுகத்தில் பெருமளவான பொருட்கள் கைமாறப்படுகின்றது. அவற்றுள் 70 வீதமானவை மீள் ஏற்றுமதி பொருட்களாகும். இவற்றுள் பெரும்பாலானவை ஆபத்தான பொருட்கள் என்பதை நாம் அறிவோம். கொழும்பு துறைமுகத்திற்கு அண்மித்த சர்வதேச கடலில் பெருமளவிலான எண்ணெய் கப்பல்களே பயணிக்கின்றன.
நாளொன்றில் 300 வரையிலான கப்பல்கள் பயணிக்கின்றன. அவற்றுள் 40-50 வரையிலானவை எண்ணெய் கப்பல்களாகும். எனவே இக்கப்பல்களின் பாதுகாப்பு தொடர்பாக நாம் கவனம் செலுத்த வேண்டும். இவ் எண்ணெய் கப்பல்களிற்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்தால் அது எம் பொருளாதாரத்தை மாத்திரமன்றி சுற்றாடலிலும் பாதிப்புக்களை ஏற்படுத்தும். எனவே நாம் துறைமுகத்தின் பாதுகாப்பு தொடர்பாக விசேட அவதானம் செலுத்த வேண்டுமென’ செயலாளர் எல்.பீ.ஜயம்பதி தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலின் பொழுது துறைமுகத்தின் பாதுகாப்பினை உறுதிச் செய்யும் பொருட்டு அனைத்து தரப்பினரையும் உள்வாங்கி விசேட குழுவொன்றும் நிறுவப்பட்டது.