– சுஐப் எம் காசிம் –
முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் அஷ்ரப்பின் மறைவிற்குப் பின்னர் அம்பாறை முஸ்லிம் பிரதேசங்களை கணக்கிலெடுக்காது அரசியல் செய்தவர்கள் இப்போது ஓடித்திரிகிறார்கள். மக்கள் காங்கிரஸின் வரவு அவர்களை கொழும்பில் இருக்கவிடாமல் அம்பாறை பிரதேசங்களுக்கு அடிக்கடி வரும் நிலையை ஏற்படுத்தியுள்ளதென்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் றிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.
சம்மாந்துறையில் நேற்று (04) மாலை இடம்பெற்ற மக்கள் காங்கிரஸின் பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றினார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் “லக்சல” நிறுவனத்தின் தலைவருமான கலாநிதி இஸ்மாயில் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்தப் பொதுக் கூட்டத்தில் பிரதியமைசர் அமீரலி, எம் பிக்களான நவவி, இஷாக், மஹ்ரூப், அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜமீல், பிரபல அறிவிப்பாளர் ஏ ஆர் எம் ஜிப்ரி ஆகியோர் உரையாற்றினர்.
மக்கள் காங்கிரஸின் செயலாளார் சுபைர்தீன், சட்டத்தரணிகளான மில்ஹான், துல்ஹர்னைன் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்ற இக்கூட்டத்தில் அமைச்சர் ரிஷாட் உரையாற்றியதாவது,
மர்ஹூம் அஷ்ரப்பின் மறைவின் பின்னர் தலைமைப் பொறுப்பை ஏற்றவர்கள் முஸ்லிம் சமூகத்திற்கு எதுவுமே செய்யாது தூங்கிக் கிடந்தார்கள். பசப்பு வார்த்தைகளாலும் வார்த்தை ஜாலங்களாலும் இந்த சமூகத்தை ஏமாற்றி ஏமாற்றி அரசியல் பிழைப்பு நடாத்தினர். தலைமையை தட்டிக் கேட்பவர்களை கட்சியிலிருந்து வெட்டியெறிந்தார்கள். தலைமைக்கு கூஜா தூக்கிகளாக இருப்பவர்களையும் தலைமைக்கு சாமரை வீசுபவர்களையும் தியாகிகளாக வெளியுலகத்திற்கு காட்டினார்கள்.
பிழைகளை தட்டிக் கேட்பவர்களை துரோகிகளாக முத்திரை குத்தினர். இவர்களின் இனிமையான பேச்சுகளில் கவர்ந்து இந்த சமூகம் தொடர்ந்தும் ஏமாறிக்கொண்டிருக்கின்றது. அம்பாறை முஸ்லிம் பிரதேசங்களில் எந்த அபிவிருத்தியும் நடைபெறவில்லை, பாதைகள் சீரழிந்து கிடக்கின்றன. இளைஞர் யுவதிகள் தொழிலின்றி அலைகின்றனர். முஸ்லிம் சமூகத்தை ஏமாற்றி ஏமாற்றி தொடர்ந்தும் பிழைப்பு நடத்தலாம் என்று எண்ணியிருந்தவர்களுக்கு மக்கள் காங்கிரஸின் வரவு குலை நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. முஸ்லிம் சமூகத்தைத் தேர்தல் காலங்களில் உசுப்பேற்றி உசுப்பேற்றி ஆயிரம் விளக்குப் பாடல்களை போட்டுக்காட்டி வாக்குகளைக் கொள்ளையடித்தவர்களுக்கு இன்று வயிற்றிலே புளியைக் கரைத்துள்ளது மக்கள் காங்கிரஸ்.
இந்தக் கட்சி இங்கு வருகின்றது என்று சும்மா சொன்னால் கூட அதற்கு முதல் நாளே இங்கு வந்து பெட்டிக் கடைகளில் முச்சந்திகளில் தேநீரை அருந்தும் நிலையை நாம் ஏற்படுத்தியுள்ளோம்.
நாம் முஸ்லிம் சமூகத்தை அடகுவைத்து அவர்களின் தலைகளை எண்ணிக்காட்டி அரசிடமிருந்து கிடைப்பதைச் சுருட்டிக் கொள்ளலாம் என நினைப்பவர்கள் அல்ல, நல்லாட்சி அரசுக்கு ஆதரவளித்த போது முஸ்லிம் சமூகத்தின் அபிலாஷைகளை முன்வைத்து ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்ட பின்னரே பிரசாரங்களில் ஈடுபட்டோம்.
”மனச்சாட்சிப்படி வாக்களியுங்கள்” என்று உங்களிடம் நாம் கோரவில்லை. அப்படிக் கூறுவதென்றால் ஒரு அரசியல் கட்சி நமக்குத் தேவையில்லை.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஷ்ரப்பின் பின்னர், அந்தக்கட்சி தடம் புரண்டு தவறான பாதையிலே பயணித்ததை பொறுக்கமாட்டாதே நாம் புதிய கட்சியை ஆரம்பித்தோம். முஸ்லிம் காங்கிரஸ் தலைமையுடன் இருந்து நாம் அரசியல் செய்த காலங்களில் நாம் அனுபவத்தில் குறைந்தவர்களாக இருந்தோம். இருந்த போதும் தலைமை சமூகத்தின் தலையை தடவித்தடவி தன் காலத்தை ஓட்டியபோது “ நாம் செல்லும் பாதை சமூகத்திற்கு பயன் அளிக்காது” என்பதை பலதடவை சுட்டிக் காட்டினோம்.
செய்வோம் செய்வோம் என்று கூறி எம்மையும் தாப்புக்காட்டி மக்களையும் ஏய்ப்புக்காட்டி காலத்தை அவமாக்கியதனால் தான் நாம் பிரிந்து சென்று புதுக்கட்சியை ஆரம்பித்தோம். இறைவன் அருளால் இன்று நாம் ஒரு விருட்சமாக வளர்ந்து அவர்களுக்கு சமனான சக்தியாக உயர்ந்து நிற்பதை பொறுக்கமாட்டாது எம் மீது சேற்றை வாரிப் பூசுகின்றனர். அம்பாறை மாவட்டத்தில் நாம் முன்னெடுக்கும் அபிவிருத்தித் திட்டங்களுக்குக் கூட இப்போது முட்டுக்கட்டை போடுகின்றனர்.
சமுதாயம் வாழவேண்டும் சமூகத்தின் மீது நடத்தப்படும் அநியாயங்கள் அத்தனையையும் தட்டிக் கேட்க வேண்டும். மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்க வேண்டுமென்ற இதய சுத்தியோடேயே நாம் அரசியல் நடத்துகின்றோம். எந்தக் காலத்திலும் யாருக்கும் விலை போக மாட்டோம். முள்ளந்தண்டுள்ள கட்சியாக திராணியுள்ள கட்சியாக எமது மக்கள் காங்கிரஸை நாங்கள் வழிநடாத்தி வருகின்றோம்.
இந்தப் பயணத்திலே நீங்களும் இணைந்து கொள்ளுங்கள் என அமைச்சர் கூறினார்.