Breaking
Sun. Dec 22nd, 2024

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினரும், மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவருமான எம்.எச்.எம். நவவி (22) பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை…

குருநாகல் மாவட்டத்திலிருந்து புத்தளம் மாவட்டத்திற்கு “தெதுறு ஓயா திட்டத்தை” விரிவுபடுத்துவதற்காக நீர்வழங்கல் மற்றும் நீர்வள முகாமைத்துவ அமைச்சர் காமினி விஜித் விஜித முனி சொய்சாவிற்கு நான் நன்றி கூற வேண்டும். 2016 ஜூலையில் எதிர்பார்த்த மழை பெய்யாததால் எமது மாவட்ட மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக தேங்காய், நெல் மற்றும் முந்திரி போன்ற அனைத்துப் பயிர் செய்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

கலா ஓயா திட்டத்தின் இரண்டாம் கட்டம் தொடர்பாக நான் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். எங்களுக்கு தெரியும், யோதஎலாவில் இருந்து 15 கி.மீ. தொலைவில் நீலா பெம்மாவில், கலா ஓயாவுக்கு ஒரு அணைக்கட்டு உள்ளது. அந்தப் பகுதியில் உள்ள பிரச்சினைகள் குறித்து அமைச்சரிடம் ஏற்கனவே நான் தெரிவித்திருக்கின்றேன். அந்தப் பகுதியை கடந்து ஏனைய பகுதிகளுக்கு நீர் வழிந்தோட முடியாதுள்ளது, அதனால்தான் கலா ஓயாவில் தண்ணீர் அதிகரித்து, அருகிலுள்ள களப்பு மற்றும் மக்கள் பகுதிக்குள் செல்கிறது. எனவே இந்தத் திட்டத்தை நாங்கள் பார்க்கும்போது, ஓட்டபல்லமவில் பல நீர் நிலைகள் உள்ளன என்பது தெரிகின்றது. நான் சிலவற்றைப் பெயரிடலாம்: பொத்தான வெவ, ரால்மடு வெவ, மற்றும் புளியங்குளம வெவ இதுபோன்றே இன்னும் பல தொன்மையான நீர் நிலைகள் அங்கு உள்ளன.

வண்னத்திவில்லுவில் 1000 ஏக்கர்க்கு அதிகமான நிலப்பகுதியில் முந்திரி மற்றும் தென்னை பயிரிடப்பட்டுள்ளது. கரடிப்புள்ளில் 500 ஏக்கர்க்கு அதிகமான நிலப்பகுதியில் தென்னை பயிரிடப்பட்டுள்ளது. மயிலங்குளம் பகுதியில் 300 ஏக்கருக்கு அதிகமான பரப்பளவில் வயல் நிலம் உள்ளது. இஸ்மாயில்புரத்தில் 200 ஏக்கருக்கு அதிகமான பரப்பளவில் வயல் நிலம் உள்ளது. கரத்தீவு பகுதியில் 2500 ஏக்கருக்கு அதிகமான பரப்பளவு நிலம் விவசாய நிலமாக உள்ளது. எனவே, நம் பூர்வ மன்னர்களால் கட்டப்பட்ட இந்த நீர் நிலைகளுக்கு நீர் வழங்க முடியுமானால், இந்த நிலங்கள் அனைத்தும் ஆண்டு முழுவதும் பாசனத்திற்கு உட்படுத்தப்படும்.

கடந்த இரண்டு, மூன்று வருடங்களாக இந்த செயற்திட்டத்தை முன்னோக்கி நகர்த்துவதற்காக நானும், அமைச்சர் ரங்க பண்டார அவர்களும் முயற்சி செய்கின்றோம். கடந்த ஆண்டு ஜூலை மாதம் இதன் உண்மையான தேவையை எமக்கு உணர்த்தியது. ஆனால் எங்களால் இந்த திட்டத்தை தொடங்க முடியாது என்று நினைக்கிறேன். ஏனென்றால் இதற்கான அதிகாரம் பல அதிகாரிகளின் கைகளில் இருக்கின்றது. இதில் இன்னுமொரு துரதிஷ்டவசமான விடயம் நிலங்களைப் பற்றிய ஒரு பிரச்சினையாகும், ஏனென்றால் அந்த நிலங்களில் பெரும்பாலானவை வனவிலங்குத் திணைக்களத்தின் கீழ் வருகின்றன. ஆனால், பயிர்ச் செய்கைக்கு உரிய நிலங்களை வனவிலங்குத் திணைக்களத்தின் கீழ் கொண்டுவர முடியாது என நான் நினைக்கின்றேன்.

அமைச்சரினால் வழங்கப்பட்ட வாக்குறுதியின்படி, நாம் இந்த முழுப் பகுதியையும் பயிர்ச்செய்கைக்கு உட்படுத்த முடியும். மேலும் அந்தப் பிரதேச மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை விரைவாகவே தீர்த்துவைக்கவும் முடியும். உண்மையில் இத்திட்டத்தின் படி, கலா ஓயாவிற்கு மகாவலி ஆற்றில் இருந்து மாத்தளை, உக்குவெல, கலாவெவ மற்றும் ராஜங்கணய ஆகிய பகுதிகளின் ஊடக நீர் வந்து சேர்கின்றது. இறுதியாக அது கலா ஓயாவின் ஊடாக புத்தளம் களப்பில் சேர்கின்றது. எனவே இது உண்மையில் சிறந்த திட்டமாகும். அமைச்சர் மற்றும் முதலமைச்சரின் ஆதரவுடன், நாம் எதிர்காலத்தில் இதன் மூலம் எமது மக்களின் பிரதான தண்ணீர் பிரச்சினைகளை தீர்க்க முடியும் என்பதில் உறுதியாக உள்ளேன்.

விவசாயத் துறை தொடர்பாக பேசுகின்ற போது, கல்பிட்டி பிரதேசத்தில் பரவளாக 17,000 ஏக்கர் நிலப்பகுதியில் விவசாய செய்கை நடைபெறுகின்றது என்பதை குறிப்பிட்டே ஆகவேண்டும்.  அமைச்சர் இது பற்றி அறிந்திருப்பதாக நான் நினைக்கிறேன். விவசாய அமைச்சகம் விவசாய தரங்களை முன்னேற்றுவதில் மற்றும் விவசாயிகளுக்கு உதவுவதில் சில முடிவுகளை எடுத்துள்ளது. இருந்தாலும் நாம் எப்போதும் தம்புள்ளை பற்றி மட்டுமே பேசுகின்றோம்,.ஆனால் துரதிஷ்டவசமாக எமது கல்பிட்டி பிரதேசத்தின் விவசாய உற்பத்தி பொருட்களின் 50% சதவிதமானவை நுரைச்சோலை பொருளாதார மையத்தின் ஊடாகவே தம்புள்ளையை வந்தடைகின்றது. ஏனையவற்றில் 25 வீதம் கொழும்பு சந்தையை சென்றடைகின்றன. ஏனைய சுமார் 25 சதவீத பொருட்கள் நேரம் கைகொடுக்காமல் பழுதடைந்து வீணாகின்றன. விவசாயிகளுக்கு இது ஒரு பெரிய இழப்பாகும்.

எனவே,  அமைச்சர் மற்றும்  மாகாண அமைச்சர்கள் இந்த விடயத்தை கருத்தில் கொண்டு, விவசாய பொருட்களை பாதுகாத்து வைப்பதற்க்கான குளிர் அறைகளை நுரைச்சோலை சந்தைக்கு வழங்குவார்களாயின், அது எமது விவசாயிகளுக்கு பெரிதும் பயனாக அமையும், எனவே இவ்விடயத்தை கருத்தில்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.

Related Post