தென்கொரியாவில் பணியாற்றும் இலங்கையர்களால் அதிக பொருளாதார முன்னேற்றத்தை தமது நாடு அடைந்து வருவதாக இலங்கைக்கான தொன்கொரிய தூதுவர் தெரிவித்துள்ளார்.
கைத்தொழில் – வாணிபத்துறை அமைச்சர் றிஷாத் பதியுதீனை நேற்று (03.06.2014) அமைச்சில் வைத்து சந்தித்து உரையாடும்போதே தென்கொரிய தூதுவர் மேற்படி கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இரு நாடுகளுக்குமிடையிலான வர்த்தக உறவு குறித்து இச்சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டது.
தென்கொரியாவில் பணியாற்றும் இலங்கையர்களின் உழைப்பு எமது நாட்டுக்கு அதிக வருமானத்தையும் பொருளாதார ரீதியாக முன்னேற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவர்களது பனி பாராட்டுக்குரியது. அதற்காக விசேடமாக இலங்கைக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன் என்றார் தூதுவர்.
இரு நாடுகளுக்குமிடையில் வர்த்தக உறவை ஊக்குவிப்பதன் அவசியம் குறித்து சுட்டிக்காட்டிய அமைச்சர் றிஷாத் பதியுதீன், இரு நாடுகளினதும் வர்த்தக தூதுக்குழுக்களை ஒன்றிணைத்து செயற்படுத்தல், இலங்கையின் வர்த்தக குழுவொன்றை தென்கொரியாவுக்கு அனுப்புதல் மற்றும் தென்கொரிய முதலீட்டாளர்களை இலங்கையில் முதலீடு செய்வது குறித்து ஆலோசனைகளை முன்வைத்தார்.
யுத்தம் நிறைவுக்கு வந்து கடந்த ஐந்து வருடங்களில் இலங்கை பொருளாதார ரீதியாக அடைந்திருக்கும் முன்னேற்றத்தை அமைச்சர் சுட்டிக்காட்டியவேளை, அதனைத் தான் ஏற்றுக்கொள்வதாக தென்கொரிய தூதுவர் தெரிவித்தார்.