வடகொரிய அதிபர் கிம் ஜொங் உன் தென் கொரியாவுடன் பேச்சுவார்த்தை நடாத்த தேவைப் பட்டால் மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்யவும் தான் தயாராக இருப்பதாக வியாழக்கிழமை நிகழ்த்திய புது வருட சிறப்புரையில் தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பை வரவேற்றுள்ள சியோல் நிர்வாகம் இது வடகொரியாவுடனான உறவினை சுமுகமாக்குவதில் முக்கிய படிக்கட்டு என்றும் அறிவித்துள்ளது.
சமீபத்தில் வடகொரிய அரசு மீது சர்வதேசம் முக்கிய மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள முன் வைத்திருந்ததுடன் ‘தி இன்டர்வியூ’ என்ற சர்ச்சைக்குரிய திரைப்பட விவகாரத்தில் அமெரிக்காவின் சோனி பிக்சர்ஸ் நிறுவனத்தை ஹேக் செய்த குற்றச்சாட்டும் அதன் மீது சுமத்தப் பட்டிருந்தது. இந்த ஹேக்கிங் நடவடிக்கையை மறுத்திருந்த வடகொரிய அரசு, ஆயினும் சோனி நிறுவனம் முடக்கப் பட்டது சரியான நடவடிக்கையே என்றும் இதனை வெளிநாட்டிலுள்ள தனது அனுதாபிகள் அல்லது ஆதரவாளர்கள் செய்திருக்கலாம் எனவும் விமர்சித்திருந்தது.
இந்நிலையில் அதிபர் கிம் தனது உரையில் சூழ்நிலையும் நிபந்தனைகளும் சாதகமாக அமையும் பட்சத்தில் தென்கொரியாவுடன் நல்லிணக்க பேச்சுவார்த்தை நடத்தப் படாமல் இருப்பதற்குத் தனிப்பட்ட வேறு எந்தக் காரணமும் கிடையாது எனத் தெரிவித்திருந்தார். 2007 ஆம் ஆண்டு பேச்சுவார்த்தையின் தோல்விக்குப் பின்னர் இவ்விரு நாடுகளுக்கும் இடையே உயர் மட்டப் பேச்சுவார்த்தை இதுவரை நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவ்வப்போது இவற்றைப் பிரதிநிதிப் படுத்தும் அரசியல் முக்கியத்துவம் அற்ற அதிகாரிகள் தமக்கிடையே பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தனர்.
இதேவேளை கடந்த வாரம் தென்கொரியாவின் தற்போதைய அதிபர் பார்க் தேர்வு செய்யப் பட்டிருந்த தேர்தல் முறைகேடு உடையது என்றும் முன்னால் அதிபரான அவரின் தந்தையார் கூட ஒரு சர்வாதிகாரி தான் என்றும் வடகொரிய அரசு கருத்துத் தெரிவித்திருந்தது. இந்நிலையில் கிம் இன் இவ்வறிக்கையானது சியோல் மற்றும் ப்யொங் யாங்கிற்கு இடையே அமைச்சர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான ஓர் அழைப்பாகவே கருதப் படுகின்றது. கடந்த வருடம் ஏப்பிரலில் ஜேர்மனியின் டிரெஸ்டென்னில் தென் கொரிய அதிபர் பார்க் உரையாற்றுகையில், முன்னர் ஜேர்மனியின் ஜனநாயக ஆட்சி நிலவிய மேற்குப் பகுதியும் சோவியத் ரஷ்யாவின் கம்யூனிச கிழக்குப் பகுதியும் தமது வேற்றுமைகளை மறந்து விட்டு ஐக்கிய ஜேர்மனியாக இணைய முடிந்தது என்றால் கொரிய தேசங்களும் தமது உறவை நிச்சயம் பலப் படுத்திக் கொள்ள முடியும் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.