தென் கொரியாவில் வேகமாக பரவி வரும் மெர்ஸ் வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
சவுதி அரேபியா நாட்டில் கடந்த 2012-ம் ஆண்டு ஜூன் மாதம் மர்ம நோய் ஒன்று தாக்கியது. அது புது வகை கிருமியால் உருவாகியிருந்தது. இந்த நோய்க்கு ‘மெர்ஸ்’ என்று பெயரிடப்பட்டது. இந்நோய் தாக்கியவர்களில் பலர் உயிரிழந்தனர். அங்கிருந்து ‘மெர்ஸ்’ நோய் மற்ற நாடுகளுக்கும் பரவியது. உலகம் முழுவதும் இதுவரை 1167 பேரை ‘மெர்ஸ்’ நோய் தாக்கியது. இதில் 479 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. நோய் எதிர்ப்பு சக்தி மருந்தை கொடுத்தே நோயை குணப்படுத்துகிறார்கள்.
இந்நிலையில் தென்கொரியாவில் தற்போது ‘மெர்ஸ்’ நோய் பரவியுள்ளது. அரபு நாட்டுக்கு சுற்றுலா சென்று வந்த ஒருவர் மூலம் இந்த நோய் அங்கு பரவியுள்ளது தெரிய வந்துள்ளது. இதனால் நாடு முழுவதும் உஷார் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வேகமாக பரவும் வைரஸை கட்டுப்படுத்தும் விதமாகவும் நோய் பரவுவதை தடுக்கும் பொருட்டும் நேற்று 209 தொடக்கப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. தற்போது மேலும் 491 பள்ளிகள் மற்றும் கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளன. தலைநகர் சியோலில் முக கவசம் அணிந்து செல்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்நாட்டுக்கு சுற்றுலா வரவிருந்த 7000-க்கும் மேற்பட்ட சீனா மற்றும் தைவான் நாட்டு சுற்றுலா பயணிகள் தங்கள் பயணத்தை ரத்து செய்துவிட்டனர்.
இந்நிலையில் 82 வயதான ஆண் ஒருவர் ‘மெர்ஸ்’ வைரஸ் தாக்குதலுக்கு பலியாகியுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் பலியானவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இதுவரை 37 பேரை நோய் தாக்கியுள்ளது.