வடகொரியா நாடு தனது பக்கத்து நாடான தென் கொரியாவை தொடர்ந்து மிரட்டி வருகிறது. இதற்காக சமீபத்தில் அணுகுண்டு சோதனை, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை போன்றவற்றை நடத்தியது.
தென் கொரியாவுக்கு அமெரிக்கா ஆதரவாக இருந்து வருகிறது. வடகொரியாவை எச்சரிக்கும் வகையில் தென்கொரியாவும், அமெரிக்காவும் கூட்டு போர் ஒத்திகையில் ஈடுபடுகின்றன. இதற்காக இரு நாட்டு படைகளும் கொரிய கடற்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளன. நாளை போர் ஒத்திகை முழு வீச்சில் தொடங்குகிறது.
இந்த நிலையில் வட கொரியா ராணுவம் ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:–
தென்கொரியாவும், அமெரிக்காவும் சேர்ந்து வடகொரியாவில் ஊடுருவி தாக்கும் நோக்கத்தில் இந்த போர் ஒத்திகையை செய்கின்றன. அவர்கள் வடகொரியாவை தாக்குவார்கள் என எதிர்பார்க்கிறோம்.
எனவே, நாங்கள் முன் கூட்டியே போருக்கு தயாராகி விட்டோம். எங்கள் படைகள் எல்லையில் உடனடி தாக்குதல் நடத்தும் வகையில் தயாராக உள்ளன. எந்த நேரத்திலும் நாங்கள் தாக்குதலை தொடங்குவோம். நாங்கள் போரை தொடங்கி விட்டால் நிறுத்த மாட்டோம். ஒட்டு மொத்த தென் கொரியாவையும் கைப்பற்றுவோம் தலை நகரம் சியோல் உள்பட அனைத்து பகுதியும் எங்கள் கைவசம் வரும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.