தெமட்டகொடை பகுதியில் மஞ்சள் கடவையில் பாதை மாறிக்கொண்டிருந்த தாயையும் மகளையும் காரில் வேகமாக வந்து மோதி உயிரிழக்க செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 15 வயதுடைய சிறுவன் மற்றும் சிறுவனின் தாய் ஆகியோரை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அத்துடன் பாதிக்கப்பட்ட தரப்பான கொல்லப்பட்ட பெண்ணின் மூத்த மகளுக்கு 2 இலட்சம் ரூபா கருணைக் கொடை வழங்கவும் நீதிமன்றம் சந்தேக நபர்களுக்கு உத்தரவிட்டது.
குறித்த விபத்தின் போது காரை செலுத்தியதாக கூறப்படும் 15 வயதுடைய மொஹம்மட் ஷரீப் மொஹம்மட் பாரூக் மற்றும் அவருக்கு காரை செலுத்துவதற்கு அனுமதித்து காரின் திறப்பை வழங்கிய அவரது தாயாரான 35 வயதுடைய சகீலா பானு மொஹம்மட் சலீம் ஆகியோருக்கே கொழும்பு மேலதிக நீதிவான் (போக்கு வரத்து) சந்தன கலல் சூரிய இவ்வாறு பிணையில் செல்ல நேற்று அனுமதி வழங்கினார்.
தலா 10 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும் 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளிலும் இவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. கடந்த 16 ஆம் திகதி சனிக்கிழமையன்று இடம்பெற்ற இந்த விபத்து தொடர்பிலான வழக்கு நேற்று கொழும்பு மேலதிக நீதிவான் (போக்குவரத்து) சந்தன கலல் சூரிய முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன் போது விஷேட அடையாள அணிவகுப்பும் இடம்பெற்றது. அடையாள அணி வகுப்பின் போது சாட்சியாளர்கள் இருவர் 15 வயதான சிறுவனையும் அவன் தாயையும் அடையாளம் காட்டினர்.
இதன் போது சிறுவன் மற்றும் தாய் ஆகியோர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி தமது தரப்பினருக்கு பிணை வழங்குமாறு நீதிவானிடம் கோரிக்கை விடுத்தார்.
இது தொடர்பில் ஆராய்ந்த நீதிவான் கடும் நிபந்தனைகளுடன் பிணை வழங்க சம்மதித்தார். அதன்படி 15 வயதான சிறுவன் மற்றும் தாய்க்கு தலா 10 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணையும் 10 இலட்சம் ரூபா பெறுமதியான தலா இரு சரீரப் பிணைகளிலும் செல்ல நீதிவான் சம்மதித்தார். அத்துடன் 15 வயதான சிறுவன் மற்றும் அவனது தாய் ஆகியோருக்கு வெளி நாடு செல்ல தடை வித்த நீதிவான் சந்தன கலல்சூரிய, பாதிக்கப்பட்ட தரப்புக்கோ அல்லது சாட்சியாளர்களுக்கோ ஏதேனும் ஒரு வகையில் அழுத்தங்களையோ அச்சுறுத்தல்களையோ பிரயோகித்தால் பிணையை ரத்து செய்து மீண்டும் விளக்கமறியலில் வைப்பதாக எச்சரித்தார்.
இந் நிலையில் தாயையும் தனது சகோதரியையும் இந்த விபத்தினால் இழந்துள்ள இறந்த பெண்னின் மூத்த மகளுக்கு இரண்டு இலட்சம் ரூபா கருணை கொடையை வழங்க சந்தேக நப்ர்களுக்கு உத்தரவிட்ட நீதிவான் இது குறித்த வழக்கை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார்.
கடந்த 16 ஆம் திகதி இரவு 8.50 மணியளவில்தெமட்டகொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பேஸ்லைன் வீதியின் மவுன்ட் மேரி பிரதேசத்தில் மஞ்சள் கடவையில் பாதை மாறிக்கொண்டிருந்த தாயும் மகளும் 15 வயதுடைய சிறுவன் செலுத்திய காரில் மோதி பரிதாபகரமாக உயிரிழந்திருந்தனர்.
சம்பவத்தில் ரி 20 தோட்டம், பேஸ்லைன் வீதி கொழும்பு 8 என்ற முகவரியில் வசித்து வந்த வீரசிங்க ஆரச்சிலாகே அனுலா (வயது 47), அவரது 10 வயதான மகள் சமாதி ரஸ்மிகா ஆகியோரே உயிரிழந்துள்ளனர். காரை செலுத்தியதாக கூறப்படும் 15 வயதுடைய மொஹம்மட் ஷரீப் மொஹம்மட் பாரூக் மற்றும் அவருக்கு காரை செலுத்துவதற்கு அனுமதித்து காரின் திறப்பை வழங்கிய அவரது தாயாரான 35 வயதுடைய சகீலா பானு மொஹம்மட் ஷரீப் ஆகியோர் சந்தேக நப்ர்களாக பெயரிடப்பட்டு கைதுசெய்யப்பட்டனர். அவர்களுக்கு எதிராகவே கொழும்பு மேலதிக நீதிவான் முன்னிலையில் விசாரணைகள் இடம்பெற்ரு வருகின்றன.