தெமட்டக்கொடை, சமந்தா திரையரங்கு அருகே தெமட்டக்கொட சமிந்த உள்ளிட்ட பாரதலக் ஷ்மன் பிரேமச்சந்திரவின் கொலை சந்தேக நபர்களை ஏற்றிச்சென்ற சிறைச்சாலை பஸ் வண்டி மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டின் போது, துப்பாக்கிச் சூட்டை நடத்திய சந்தேக நபர்கள் தரப்பிலும் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக நம்பப்படுகின்றது. சிறைச் சாலை பஸ் வண்டியில் பயணித்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் நடத்திய பதில் தாக்குதலில், தாக்குதல் நடத்த மோட்டார் சைக்கிளில் வந்த சந்தேக நபர் ஒருவரே இவ்வாறு காயமடைந்துள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
துப்பாக்கிச் சூட்டை அடுத்து சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ள நிலையிலேயே பொலிஸார் இந்த சந்தேகத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
பாதையில் பல மீற்றர்களுக்கு காணப்பட்ட இரத்தக் கறைகளை மையப்படுத்தியே பொலிஸார் இந்த சந்தேகத்தை வெளிப்படுத்துவதாக பொலிஸ் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார். அத்துடன் சம்பவம் குறித்த விசாரணைகள் உடனடியாக கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். குற்றத் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் வெதிசிங்கவின் கீழ் விசாரணைகள் ஆரம்பிக்கப் பட்டுள்ளன.