– எஸ்.ஜே.பிரசாத் –
தெற்காசிய விளையாட்டு விழாவில் பதக்கங்கள் வென்றெடுக்கும் இலங்கை வீர, வீராங்கனைகளுக்கு பணப்பரிசு வழங்கப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
தங்கப் பதக்கத்திற்கு 5 இலட்சம் ரூபாவும் வெள்ளிப் பதக்கத்திற்கு 3 இலட்சம் ரூபாவும் வெண்கலப் பதக்கத்துக்கு ஒரு இலட்சம் ரூபாவும் வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.
12ஆவது தெற்காசிய விளையாட்டு விழா அடுத்த மாதம் 5ஆம் திகதி முதல் 16ஆம் திகதிவரை இந்தியாவின் அசாம் மாநிலத்தில் நடைபெறுகிறது.
இந்த விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்ளும் வீர, வீராங்கனைகள் அனைவரும் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவின் தலைமையிலான கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.
இதில் உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இலங்கை சார்பாக 23 வகையான விளையாட்டுப் போட்டிகளில் 500க்கும் மேற்பட்ட வீர, வீராங்கனைகள் பங்குபற்றவுள்ளனர்.
அங்கு தொடர்ந்து பேசிய அமைச்சர், வீர, வீராங்கனைகள் அனைவரும் இணைந்து தெற்காசியப் போட்டிகளில் இலங்கைக்கு வெற்றியுடன் புகழீட்டித் தரவேண்டும். அதை மட்டுமே நாம் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம்’’ என்றார்.
பத்து வகையான விளையாட்டுப் போட்டிகளுக்கான பயிற்றுநர்களை வெளிநாடுகளிலிருந்து வரவழைத்துள்ளோம்.
தெற்காசியப் போட்டிகளுக்கு தயாராவதற்கு எங்களுக்கு 4 மாத காலம்தான் இருந்தது. இந்தக் குறுகிய காலத்திற்குள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்துவிட்டோம்.
வீர, வீராங்கனைகளுக்கு என்னென்ன தேவையோ அவை அனைத்தையும் நாம் வழங்கியுள்ளோம்.
இதற்கு பிரதியுபகாரமாக உங்களிடமிருந்து நாம் எதிர்பார்ப்பது பதக்கங்களைத்தான்.
அனைவரும் ஒன்றிணைந்து தெற்காசிய விளையாட்டு விழாவில் இலங்கைக்கு வெற்றியையும் புகழையும் ஈட்டிக்கொடுக்க வேண்டும்’’ எனவும் அமைச்சர் தெரிவித்தார்.