தெஹிவளை பாத்யா மாவத்தையில் அமைந்துள்ள பள்ளிவாசலின் விஸ்தரிப்பு பணிகளுக்கு அப் பிரதேச பௌத்த பிக்குகள் சிலர் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். இச் சம்பவம் நேற்று முன்தினம் (23) இரவு இடம்பெற்றுள்ளது.
இதனையடுத்து பள்ளிவாசல் நிர்வாகிகளை தெஹிவளை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டார்.
இதற்கமைய நேற்றுக் காலை பள்ளிவாசல் நிர்வாகிகளுக்கும் எதிர்ப்பு வெளியிட்ட பௌத்த தேரர்கள் தலைமையிலான குழுவினருக்குமிடையில் பொலிஸ் நிலையத்தில் விசாரணைகள் இடம்பெற்றன.
இதன்போது ஆர்.ஆர்.ரி. நிறுவன சட்டத்தரணிகளும் பிரசன்னமாகியிருந்தனர்.
இவ் விசாரணையின்போது உரிய சட்ட ரீதியான அனுமதிகளுடனேயே பள்ளிவாசலின் விஸ்தரிப்பு பணிகள் முன்னெடுக்கப்படுவதாக குறிப்பிட்ட நிர்வாகிகள் அதற்கான ஆவணங்களையும் பொலிசாரிடம் சமர்ப்பித்தனர்.
இவ்வாறான நிலையிலேயே ஆனந்த சாகர தேரர் தலைமையிலான பிக்குகள் குழுவினர் தமக்கு அச்சுறுத்தல் விடுப்பதாக பள்ளி நிர்வாகிகள் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் எடுத்துக் கூறினர்.
பள்ளிவாசலின் விஸ்தரிப்புக்கான சட்ட உரிமையை பாதுகாக்கும் வகையிலான அடுத்த கட்ட நடவடிக்கைகளை கொழும்பு மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனமும் ஆர்.ஆர்.ரி. நிறுவனமும் இணைந்து முன்னெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.