தெஹிவளை பாத்யா மாவத்தையில் அமைந்துள்ள பெளசுல் அக்பர் பள்ளிவாசலின் கட்டிட நிர்மாணத்திற்காக தெஹிவளை கல்கிசை மாநகர சபையினால் வழங்கப்பட்டிருந்த அனுமதிப் பத்திரத்தை நகர அபிவிருத்தி அதிகார சபை இரத்துச் செய்துள்ளது.
நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சட்டத்தினால் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தினால் இதனை இரத்துச் செய்துள்ளதாக தெஹிவளை கல்கிசை மாநகர சபை ஆணையாளருக்கு அறிவித்துள்ளது.
தெஹிவளை பாத்யா மாவத்தையில் வீடொன்றினுள் முஸ்லிம் பள்ளிவாசல் இயங்கி வருவதாக அப்பிரதேச மக்களிடமிருந்து கிடைத்த முறைப்பாடுகள் தொடர்பில் நகர அபிவிருத்தி அதிகார சபை விசாரணைகள் நடத்தியது.
அங்கு சமயப் பாடசாலை ஒன்று இயங்கவில்லை என்று விசாரணைகளின் போது உறுதி செய்யப்பட்டதையடுத்து கட்டிட நிர்மாண அனுமதிப்பத்திரம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெஹிவளை கல்கிசை மாநகரசபை ஆணையாளர் தம்மிக்க முத்துகல தெரிவித்தார்.
இதேவேளை நகர அபிவிருத்தி அதிகாரசபை கட்டிட நிர்மாண அனுமதிப்பத்திரத்தை இரத்துச் செய்தாலும் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சர் சம்பிக்க ரணவக்க, ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் கலந்துரையாடி கட்டிட நிர்மாணத்துக்கான அனுமதியைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ‘விடிவெள்ளி’ எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே ஆணையாளர் தம்மிக்க முத்துகலவும் அமைச்சர் பைசர் முஸ்தபாவும் மேற்குறிப்பிட்ட விளக்கங்களை வழங்கினர்.
அமைச்சர் பைசர் முஸ்தபா தொடர்ந்தும் விளக்கமளிக்கையில்,
பாத்யா மாவத்தையில் ஒரு சமயஸ்தலமே நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. மக்களை நல்வழிப்படுத்துவதற்கும், நற்செயல்கள் புரிவதற்குமே மதஸ்தலங்கள் அமைக்கப்படுகின்றன. இது தொடர்பான விளக்கங்களை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவிடம் முன்வைக்கவுள்ளேன்.
இது ஒரு தவறான கட்டிடமல்ல, எமது நாட்டின் அனைத்து இனமக்களும் நல்லிணக்கத்துடன் வாழவேண்டும். தேசிய ஒருமைப்பாடும், நல்லிணக்கமுமே எமது இலக்காகும். எனவே பாத்யா மாவத்தை பள்ளிவாசல் தொடர்பில் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன் என்றார்.
தெஹிவளை – கல்கிஸை மாநகரசபை ஆணையாளர் விளக்கமளிக்கையில், பத்யா மாவத்தையில் ஒரு சமயப் பாடசாலை நிறுவுவதற்காகவே சுமார் 10 வருடங்களுக்கு முன்பு கட்டிட நிர்மாணத்துக்கான அனுமதி பெறப்பட்டுள்ளது.
அதன் பின்பு இந்தக் கட்டிட விஸ்தரிப்புக்காக விண்ணப்பிக்கப்பட்டதையடுத்து 2015 ஆம் ஆண்டு KBP/143/2015 எனும் இலக்கத்தில் அதற்கான அனுமதி வழங்கப்பட்டது.
இதேவேளை இந்த பள்ளிவாசல் விஸ்தரிப்பு பணிகளுக்கு எதிராக பிரதேச மக்கள் குரல் கொடுத்திருந்ததால் முன்னாள் தெஹிவளை –கல்கிசை மேயர் தனசிறி அமரதுங்க கடந்த மே மாதம் 30 ஆம் திகதி விஸ்தரிப்பு பணிகளுக்கு தற்காலிக தடைவிதித்திருந்தார்.
இதனையடுத்து நகர அபிவிருத்தி அதிகாரசபை விசாரணைகளை நடாத்தி கட்டிட நிர்மாண அனுமதியை இரத்துச் செய்துள்ளது என்றார்.
நகர அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் எஸ்.எஸ்.பி.ரத்நாயக்க பள்ளிவாசல் நிர்வாக சபைக்கு ஒரு பிரதியும் அனுப்பியுள்ளனர். தெஹிவளை கல்கிசை மாநகரசபை ஆணையாளருக்கு அனுப்பி வைத்துள்ள 2016.06.29 ஆம் திகதியிடப்பட்ட கடிதத்தில் பின்வருமாறு தெரிவித்துள்ளார்.
தெஹிவளை – கல்கிசை மாநகர சபையினால் வழங்கப்பட்டுள்ள KBP/143/2015 ஆம் இலக்க அனுமதிப்பத்திரம் தொடர்பான ஆவணங்களைக் கொண்ட கோவை பரீட்சிக்கப்பட்டது.
முறைப்பாட்டுக்காரர்கள் பாரிய நகரம் மற்றும் அபிவிருத்தி அமைச்சுக்கு அழைக்கப்பட்டு கலந்துரையாடப்பட்டது. இதன்பின்பே அனுமதிப் பத்திரத்தை இரத்துச் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.