தெஹிவளை மிருகக்காட்சி சாலை தொடர்பில் உலகம் முழுவதும் பொய் குற்றச்சாட்டுக்கள் பரப்பப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செயலை இலங்கையிலுள்ள பெண் வர்த்தகர் ஒருவரும், அவரது குழுவினரும் முன்னெடுத்து வருவதாக மிருக வதைக்கு எதிரான சங்கம் தெரிவித்துள்ளது.
மிருகக்காட்சி சாலையின் அமைவிடம் பெறுமதியான இடமென்பதால் அதனை அபகரிக்கும் நோக்கில், இங்கு மிருகவதை இடம்பெறுவதாக குறிப்பிட்டு போலியாக தயாரிக்கப்பட்ட ஒளிப்பதிவினையும் குறித்தப் பெண் இணையங்களில் பதிவேற்றி வருவதாகவும் சங்கத்தின் சிரேஸ்ட உறுப்பினர் சாந்த ஜயவீர தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த பெண்ணுக்கு நல்லாட்சியின் பிரபல அரசியல்வாதியின் செல்வாக்கு காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் இருந்து திருட்டுத்தனமாக வெளிநாடுகளுக்கு மிருகங்கள் கடத்தப்படுவதாகவும் குறித்த பெண் குற்றச்சாட்டுகளை பரப்பி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே குறித்த மிருகக்காட்சிசாலை தொடர்பில் பொய் தகவல்களை பரப்பி அரசாங்கத்தினதும், உலக நாடுகளினதும் கவனத்தை திரும்ப வைத்து மிருகக்காட்சி சாலையினை மூடுவதே இவர்களுடைய நோக்கமாகும். இது தொடர்பான உண்மையான அறிக்கையை இம்மாதம் 22ஆம் திகதி வன ஜீவராசிகள் அமைச்சிடம் கையளிக்கவுள்ளதாகவும் சங்கத்தின் உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.