Breaking
Sun. Nov 17th, 2024

திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரப் பாராளுமன்றத்தில் ஆற்றிய கன்னி உரை… (27. 08. 2020) 

கௌரவ சபாநாயகர் அவர்களே!

பாராளுமன்றத்தில் எனது முதல் பங்களிப்பை வழங்க அழைக்கப்பட்டதில் நான் மிகவும் மகிழ்ச்சியும் அடக்கமும் கொள்கின்றேன். முதலில், சபாநாயகராகத் தெரிவு செய்யப்பட்ட உங்களை வாழ்த்த விரும்புகிறேன், இந்த பாராளுமன்றத்தில் உங்கள் வழிகாட்டுதல்களை எதிர்பார்க்கிறேன்.

இந்த உயரிய பாராளுமன்றத்திற்கான எனது பயணம் எளிதான ஒன்றாக இருக்கவில்லை. ஆனாலும், இந்தப் பயணம், வெற்றியை நோக்கி நன்கு சித்தரிக்கப்பட்ட மனச்சித்திரம் கொண்டு திட்டமிட்டு நிர்ணயிக்கப்பட்ட ஒன்றாகும்.

இது என் மக்களின் நம்பிக்கையாகும். எனது மக்கள் யாராக இருந்தாலும், எந்த இனத்தவராயினும், எந்த இறைவனை வணங்கினாலும், எந்த மொழியைப் பேசினாலும், எந்தச் சமூக அந்தஸ்தில் இருந்தாலும், எந்தப் எந்தப் பாலினமானாலும்— ஈற்றில் என் மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கைதான் ஒரு தொலைக்காட்சி ஊடகவியலாளனை பாராளுமன்ற உறுப்பினாராக உருவாக்கியிருக்கிறது.

திகாமடுல்ல மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் தான் இந்தப் பயணத்தை நனவாக்கினார்கள். எனது தாய் கதீஜா பீவி, என் மனைவி ஷிஹ்னாஸ், குடும்பத்தினர் மற்றும் எனது நண்பர்கள் ஆகியோரின் எந்தப் பிரதிபலனும் எதிர்பாராத அன்பு, அவர்கள் வழங்கிய தைரியமும் ஆதரவும்தான் இந்தப் பயணத்திற்கு பலத்தையும் பாதையையும் வழங்கியது.

இந்தப் பாராளுமன்றத்தில் இது எனது கன்னியுரை ஆகும். அம்பாறை மாவட்ட மக்கள் என் மீது நம்பிக்கை கொண்டு தங்களின் பிரதிநிதியாக என்னை தெரிவு செய்ததற்கு நன்றி தெரிவிக்க நான் ஒரு கணம் நேரம் எடுத்துக் கொள்கிறேன். குறிப்பாக, சம்மாந்துறை, இறக்காமம், நாவிதன்வெளி, வரிப்பத்தாஞ்சேனை, மருதமுனை, கல்முனை, நிந்தவூர், அட்டாளைச்சேனை, ஒலுவில், பாலமுனை, அக்கரைப்பற்று என அனைத்துப் பகுதி மக்களுக்கும் என மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக பாராளுமன்றத்திற்கு தெரிவான முதலாவது உறுப்பினராக நான் இருப்பதை எண்ணி பெருமை கொள்கிறேன். திகாமடுல்ல மாவட்டத்தில் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்த எனக்கு சந்தர்ப்பத்தை வழங்கிய எமது கட்சியின் தைரியமிக்க, சத்தியத்தலைவர் கௌரவ. ரிஷாட் பதியுதீன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிக்கின்றேன். அத்தோடு, இந்த தேர்தல் பிரசாரங்களில் கட்சிக்காக கடுமையாக உழைத்த எனது சக வேட்பாளர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிக்க விரும்புகிறேன். எனது இந்தப் பாராளுமன்றத்திற்கான பயணத்தில் பலரினதும் ஆதரவு கிடைத்ததை அடக்கத்துடனும் உணர்ச்சிப் பிரவாகத்தோடும் எண்ணிக் கொள்கின்றேன்.

இலங்கையின் கிழக்குக் கரையோரமாக அமைந்திருக்கின்ற அழகிய நகரமான பொத்துவிலில் இருந்து 43 ஆண்டுகளுக்கு பிறகு இந்த நாடாளுமன்றத்திற்கு என்னை மக்கள் தெரிவு செய்துள்ளனர் என்ற பொறுப்புணர்ச்சியோடு நான் இங்கே நிற்கின்றேன்.

என் பெற்றோர் – மீராலெவ்வை சஃபியுல் முதுநபீன் மற்றும் மீராஷாஹிபு கதீஜா பீவி – ஆகியோர் ஒரு செல்வந்தக் குடும்பப் பின்னணியைச் கொண்டவர்கள் அல்லர். ஆனால் அவர்கள் தங்கள் நான்கு குழந்தைகளுக்கும் தேவையான விடயங்களை சிரமங்களுக்கு மத்தியிலும் நிறைவேற்றினார்கள். நீ ஏதாவது ஒன்றை அடையப் போராடினால் அதற்காக கடுமையாக உழைக்க வேண்டும் என்று எனது தாய் அடிக்கடி சொல்வார்.

ஒரு நாள் எனது தேர்தல் பிரச்சாரத்தின்போது, பொத்துவிலைச் சேர்ந்த ஒரு வயதான தாய் என்னிடம் வந்தார். நான் அவரை இதற்கு முன் கண்டதில்லை. அவர் என் முகத்தைப் பார்த்தார். அவர் பேச விரும்பினாலும் அவரால் பேச முடியவில்லை. அதைக் கண்ட எனக்குள் அரூபமான உணர்ச்சியொன்று பிரவாகித்தது. எனது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக, அவர் எனக்கு பத்து ரூபாய் பணத்தை நன்கொடையாக தந்தார். நான் அதை முழு மனதுடன் ஏற்றுக்கொண்டேன். அவர் என் மக்களில் ஒருவராக இருக்கிறார். எனது மக்களை பிரதிநிதித்துவப்படுத்த நான் இங்கு வந்துள்ளேன். எனது தேர்தல் பிரச்சார நடவடிக்கைள் யாவும் மக்களால் நிதியளிக்கப்பட்டவை என்று பெருமையுடன் இங்கு கூறுகிறேன். ஆம், 100% மக்களால் முழுமையாக நிதியளிக்கப்பட்டது.

எந்தளவு பணத்தைக் கொண்டும் மக்களின் இயக்கத்தை விலைக்கு வாங்க முடியாது என்று நான் உறுதியாக நம்புகிறேன். எந்தவொரு தொகைக்கும் முடியாது. உண்மையான உற்சாகமும் சமூகத்தில் மாற்றத்தை நிகழ்த்தியாக வேண்டுமென்ற அரசியல் துணிவோடு இருக்கின்ற மக்கள் இயக்கத்திற்கு யாராலும் விலை நிர்ணயிக்க முடியாது. மக்கள் இயக்கம் என்பது விலைமதிப்பற்ற நம்பிக்கை.

பாராளுமன்றத்திற்கான எனது பயணம், ஒரு வேகமான ஓட்டமாயிருந்தது. ஐந்து வாரங்களுக்குள் பிரச்சாரங்கள் அனைத்தையும் நிறைவு செய்ய வேண்டுமென்ற கட்டாயத்திற்குள் உந்தப்பட்டேன். இவ்வளவு குறுகிய காலத்தினுள் வெற்றிகரமாக பிரச்சாரத்தை நடாத்தி முடிப்பது சாத்தியமில்லை என்று பலரும் சொன்னார்கள்.

ஆனால் நான் என் மக்களை நம்பியிருந்தேன், அவர்கள் என்மீது நம்பிக்கை வைத்திருந்தார்கள். இந்தப் பாராளுமன்றத்தில் அவர்களின் நம்பிக்கை, துணிவு மற்றும் விழுமியங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தவே நான் இங்கு வந்துள்ளேன்.

எனது அரசியல் எதிரணியினர், கருத்தியலில் மட்டுமே எதிரணியினர், எனக்குள் இருக்கும் பலத்தை உணர்த்தி, இந்த இடத்தை அடையும்வரை என்னை உந்தியவர்கள் அவர்கள்தான்.

எனது தொகுதிக்கும், எனது மாவட்டத்திற்கும், எனது தேசத்துக்கும் சேவை செய்யவே இந்த இடத்திற்கு வந்துள்ளேன். எனது தொகுதிக்காகவும், எனது மாவட்டத்துக்காகவும், எனது தேசத்துக்காகவும் போராடவே இங்கு வந்துள்ளேன்.

அந்த போராட்டங்களை வென்றெடுப்பதற்காகவே நான் இங்கு வந்துள்ளேன். ஏனென்றால் நமது ஜனநாயகம் அதன் சாராம்சத்தில் போராடும் தன்மையை தழுவி நிற்கிறது –கருத்துக்களிக்கிடையான சமர்; சவாலான கருத்தியல்களுக்கும் கொள்கைப் பரிந்துரைகளுக்கும் இடையிலான மோதுகையே இங்கு நிகழும்.

நான் என் மக்கள் அனைவரினதும் குரலாக இருப்பேன் என்று உறுதியளிக்கிறேன்.

இறுதியாக, அம்பாறை மாவட்டம் மற்றும் இலங்கையைச் சேர்ந்த ஆண்களே-பெண்களே, இளைஞர்களே-முதியோர்களே உங்களிடம் நான் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். பொத்துவிலைச் சேர்ந்த ஒரு சிறுவன், எளிமையாக ஆரம்பித்து தன் வாழ்வை வெற்றி கொள்ள வேண்டுமென கடுமையாக உழைத்து, இன்று இந்த உயரிய பாராளுமன்றத்திற்கு வர முடியுமாயிருந்தால், இங்கு எல்லாமே சாத்தியம்; உங்கள் இலட்சியங்களை நீங்கள் துரத்திச் செல்லுங்கள். உங்கள் கனவுகளுக்கும் இலட்சியங்களுக்கும் தேடல்களுக்கும் நீங்கள் வகுத்திருக்கின்ற எல்லைவரை அகன்று விரிந்த ஒரு தேசமாக இந்த நாட்டை நான் காண விரும்புகிறேன்.

நீ தகுதியற்றவன், நீ விடயமறியாதவன், நீ பக்குவமில்லாதவன், நீ சிறியவன், நீ சாதிக்க மாட்டாய் என்று சொல்பவர்களின் பேச்சுக்களுக்கு ஒரு போதும் காது கொடுக்காதீர்கள். பரந்தளவான கனவு காண நான் உங்களை ஊக்குவிக்கிறேன். அவை நனவாகுவதற்காக உங்களுக்கு கைகொடுக்க நான் கடமைப்பட்டுள்ளேன்.

நாங்கள் ஒரு அற்புதமான நாட்டில் வாழ்கிறோம். நான் ஒரு இலங்கையன் என்பதில் பெருமை கொள்கின்றேன். இந்த 9 வது நாடாளுமன்றத்தில் அம்பாறை மாவட்ட மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாக்கியம் கிடைத்ததை தாழ்மையோடு ஏற்கின்றேன்.

இலங்கையர்களாகிய நாம் நமது ஜனநாயகத்தை கொண்டாட வேண்டும் என்று நான் நம்புகிறேன். நமது நாட்டின் தேர்தல்களில் நமக்கு வாக்களிக்க வாய்ப்பு கிடைத்ததும், நமது நாட்டின் விவாதத்தில் பங்கேற்கும் வாய்ப்பு நமக்குக் கிடைத்திருப்பதும் மிகப்பெரிய ஜனநாயக மகிழ்ச்சி நிலைகள்.

அரசியல் பற்றி அனைத்து பிரஜைகளும் பேசுகின்ற போதுதான் நமது ஜனநாயகம் வலுவடைகிறது. மேலும், பாராளுமன்ற உறுப்பினராக, அம்பாறை மாவட்டத்தின் குரலற்ற பிரஜைகளின் குரலாக நான் இந்தப் பாராளுமன்றத்தில் இருப்பதோடு, என்னால் முடிந்தவரை நான் பிரதிநிதித்துவப்படுத்தும் எனது மக்களுடன் தொடர்பாடல்களைப் பேணுவதை முன்னுரிமையான எனது கடமையாகவே நான் கருதுகிறேன்.

நம்முடைய தனித்துவத்தை தழுவி நின்று உயர்வு காண்போம். நமது பன்முகத்தன்மையை கொண்டாடுவோம். ஆனால் எல்லா நேரங்களிலும் நம்முடைய நமக்குப் பொதுவான மனித நேயத்தை நினைவில் கொள்வோம்.

எனது சமூகத்திற்கும் எனது நாட்டிற்கும் சேவை செய்வது கௌரவமிக்கது என்றே நான் எப்போதும் நம்புகிறேன். நான் காண விரும்புகின்ற மாற்றமாகவே, என்னை நான் ஆக்கிக் கொள்ள விரும்புகின்றேன்.

நான் என் தாய் மொழியாக தமிழ் மொழியிலும் சில வார்த்தைகள் இங்கே உரையாற்றலாம் என்று விரும்புகின்றேன். என்னைப் பொறுத்தளவிலே நான் ஒரு ஊடகவியலாளனாகப் பணியாற்றிய போது “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியை நான் நடாத்தி இருந்தேன். கனியன் பூங்குன்றனார் என்கின்ற ஒரு தமிழ் அறிஞரால் உருவாக்கப்பட்ட வாசகம்தான் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற வாசகம். எல்லாமே எனது ஊர். எல்லாருமே எனது மக்கள் என்ற கருத்தைப் பிரதிபலிக்கின்ற வார்த்தைகள் அவை. என்னுடைய தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக வைத்த தலைப்பு மட்டுமல்ல அது. என்னுடைய முழு வாழ்க்கையையும் யாதும் எனது ஊர். யாவரும் எனது மக்கள் என்கின்ற ஒரு எண்ணப்பாட்டோடு வாழ்பவன் நான்.

என்னைப் பொறுத்தளவில் என்னுடைய பிறந்த ஊரான பொத்துவிலை எடுத்துக் கொண்டால்கூட நான் பிறந்து வாழ்ந்த இடத்திலே தமிழ் சகோதரர்கள், சிங்கள சகோதரர்கள் என்று எல்லோரும் ஒருமித்து வாழ்கின்ற ஒரு சூழலை நான் அந்த இடத்தில் காண்கின்றேன்.

அதே போன்று என்னுடைய கல்விக் காலமாக இருக்கலாம். அதனைத் தொடர்ந்த ஊடகப்பணியில் நான் ஈடுபட்ட காலங்களாக இருக்கலாம். எல்லா இனங்களோடும் ஒருமித்து வாழ்ந்த வாழ்க்கைதான் என்னுடைய ஒட்டுமொத்த முழு வாழ்க்கையுமாக இருக்கிறது.

எனவே இலங்கையிலே சகோதரத்துவத்தோடும் இன ஒற்றுமையோடும் எல்லோரும் வாழவேண்டும் என்ற ஆத்மார்த்தமான விருப்பம் எனக்குள் இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் தான் நான் இந்த பாராளுமன்றத்தில் ஒரு சில விடயங்களை, என்னுடைய ஆதங்கங்களை பேசுவது என்னுடைய கடமை என நான் நினைக்கின்றேன். இந்த தேசத்திலே மக்கள் ஒற்றுமைப்பட்டு தேசப்பற்றோடு இயங்கினால் மாத்திரம்தான் இந்த தேசத்தை கட்டியெழுப்ப முடியும் என்பது என்னுடைய நம்பிக்கை.

எனது பாடசாலைக் காலமாக இருக்கலாம், பல்கலைக்கழக காலமாக இருக்கலாம், ஒரு காலத்திலே எல்லோரும் சிலாகித்துப் பேசுவார்கள்.. சிங்கப்பூர்,அன்று இலங்கை போன்று நாங்களும் வரவேண்டும் என்பதாக ஆசைப்பட்டதாம். அந்தளவு தூரம் சிங்கப்பூரை விட இலங்கை உயர்ந்த இடத்தில் இருந்ததென்று பெருமையாகப் பேசியபோது ஏன் ஒரு இலங்கைப் பிரஜையாகிய நமக்கு இந்த நிலை என்கின்ற விடயங்களை நான் சிந்தித்துப் பார்த்ததுண்டு.

உண்மையிலே இந்த நாட்டிலே இனங்களுக்கிடையில் ஒரு பரஸ்பரத்தை ஏற்படுத்தாது அரசியல் காரணங்களுக்காக இனங்களுக்கிடையில் முரண்பாட்டை உண்டாக்கியவர்களால் வந்த பிரச்சினைதான் இது என்பதை என்னால் ஊகிக்கக் கூடியதாக இருந்தது.

டீ. எஸ். சேனாநாயக்க அவர்கள் பிரதமராக இருந்து அந்தப் பிரதமர் பதவி தனக்குக் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்போடு இருந்த இந்த நாட்டினுடைய முன்னாள் பிரதமர் எஸ். டபிள்யூ, ஆர். டீ. பண்டாரநாயக்க அவர்கள் அரசியல் கோசத்திற்காக இந்த இன ரீதியான ஒரு பகுப்பை தொடங்கியது என்பதுதான் இந்த நாட்டிற்கு ஏற்பட்ட ஒரு மிகப் பெரிய பின்னடைவு என்பது என்னுடைய அவதானம்.

இதனை தொடர்ந்து பல்வேறு கட்டங்களிலும் இந்த நாட்டிலே மக்களுக்கிடையில் ஒற்றுமை ஏற்படாதா? இந்த தேசம் கட்டியெழுப்பப்படாதா? என்று ஆதங்கப்பட்டுக்கொண்டே என் வாழ்நாட்களை கடத்தி இருக்கிறேன். அந்த அடிப்படையில் நாம் பார்க்கின்ற போதுதான் முன்னாள் ஜனாதிபதி தற்போதய பிரதமர் கௌரவ மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் 2009ஆம் ஆண்டு யுத்தத்தை முடிவுறுத்தியதன் பிற்பாடு அழகான சில வார்த்தைகள் பேசினார். இந்த நாட்டிலே இரண்டு இனங்கள் தான் இருக்கின்றார்கள். ஒன்று, இந்த நாட்டை நேசிக்கின்ற இனம். இரண்டு, இந்த நாட்டை எதிர்க்கின்ற இனம் என்ற கருத்துப்பட அவருடை உரை அமைந்திருந்தது. அந்த உரை இந்த நாட்டு மக்களை ஈர்த்ததோ இல்லையோ என்னை மிகவும் ஈர்த்த ஒரு வார்த்தையாக அது இருந்தது.

எனவே இந்த நாட்டை நேசிக்கின்ற மக்களை ஒன்றுபடுத்தி எமது ஜனாதிபதி இந்த நாட்டை கட்டியெழுப்புவார். இனப்பாகுபாடுகளை இல்லாமல் செய்வார். சகல மக்களுக்கும் சமமமான உரிமைகளை வழங்குவார் என நான் எதிர்பார்த்தேன். ஆனால் அந்த ஆட்சியிலே அந்த நிலை எய்தப்படவில்லை. யார் காரணம் என்று விரல் சுட்டுவதற்குரிய ஒரு தருணமும் இதுவல்ல. அந்த தேவையும் எனக்கு இப்போது இல்லை என உணர்கின்றேன்.

ஆனால் ஒரு சாதாரணமாக இந்த நாட்டை நேசிக்கின்ற பிரஜையாக நான் மிகவும் மனவேதனைப்பட்டேன். அதன் பிறகு நல்லாட்சி அரசாங்கம் வந்தது. நல்லாட்சி அரசாங்கம் என்பது மூன்றில் இரண்டு பெரும்பான்மை கொண்ட அரசாங்கமாக இருந்தது. புதிய அரசியல் யாப்புக்கான கதவுகள் திறக்கப்பட்டன. ஒரு ஊடகவியளாலராக புதிய அரசியல் யாப்பு வர வேண்டும் சகல இனங்களினுடைய கௌரவம் அந்தஸ்த்து பாதுகாக்கப்பட்டு இந்த அரசியல் யாப்பு முன் கொண்டு செல்லப்படவேண்டும் என்ற ஒரு பெறு விருப்பத்தோடு நான் இருந்தேன். எனவே இப்படியான சூழ்நிலையிலே இந்த அரசில் யாப்பு முயற்சியும் கூட வெற்றியளிக்கவில்லை.

இறுதியாக தற்போதய ஜனாதிபதி கௌரவ கோட்டாபாய ராஜபக்ஷ அவர்கள் வந்தார். அவருடைய வருகையின் பின்னர் அவர் கூறிய ஒரு வார்த்தை “பெரும்பான்மை இன மக்களால் நான் இங்கு ஆட்சிக்கு வந்திருந்தாலும் எல்லோருக்கும் நான் ஜனாதிபதியாக இருக்கின்றேன்” என்றொரு வார்த்தையைச் சொன்னார். அந்த வார்த்தை மீது நம்பிக்கை கொண்டவனாகத்தான் இப்போது நான் பேசிக்கொண்டிருக்கிறேன். அந்த வார்த்தை மீது நம்பிக்கை கொண்டு இந்த நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமாக இருந்தால் எங்களுடைய நீதி அமைச்சர் அலி சப்ரி அவர்கள் தேர்தல் பிரச்சார மேடைகளில் பேசுகிற பொழுதெல்லாம் ஒரு லீ குவான் யூ மாதிரி, அதே போன்று ஒரு மஹாதிர் முஹம்மத் போன்றதான ஒரு தலைவர் எமது நாட்டின் தலைவர் என அடிக்கடி சொல்வார்.

ஒரு லீ குவான் யூ வாக இருக்கலாம் ஒரு மஹாதிர் முஹம்மதாக இருக்கலாம் ஏன் தென்னாபிரிக்காவை ஒருங்கிணைத்த நெல்சன் மன்டேலாவாக இருக்கலாம், முதலிலே நாட்டில் ஒரு ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி ஒரு தேசப்பற்றை ஏற்படுத்தியதன் பிற்பாடுதான் நாட்டை கட்டியெழுப்ப முடியுமானதாக இருந்தது.

எனவே நான் தயவு கூர்ந்து கேட்கிற ஒரு விடயம் இந்த நாட்டிலே நாட்டுப்பற்றை மக்களுக்கு விதைக்கின்ற வேலைகளைப் பார்த்தால் மட்டும் தான் நாம் எமது நாட்டை பொருளாதாரத்திலும் சமூகவியலிலும் முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லலாம். மாறாக அரசியல் நோக்கங்களுக்காக நாட்டுப்பற்றை மறுக்கின்ற விடயங்களில் ஆழ்ந்திருந்தால் நமக்கு விடிவு கிடையாது.

இங்கு நான் வருகை தந்த முதல் நாளிலே அவதானித்தேன். இந்த பாராளுமன்றத்தில் வயது குறைந்தவர்களில் நான் முக்கியமானவனாக இருப்பேன் என நம்புகின்றேன். இந்தப் பாரளுமன்றத்தில் முதல் நாளிலே சிங்கள தேசியமும் தமிழ் தேசியமும் கருத்தியல் ரீதியாக முட்டிக்கொண்டதை பார்த்தேன். முஸ்லிம் சமூகத்தின் பிரஜையாக நான் இந்த இடத்தில் பேசுகின்றேன். முஸ்லிம் தேசியம் என்கின்ற சிந்தனைகளைக் கூட மேலெழுப்பாது, அதைப்பற்றி பேசாது, இந்த தேசம் பற்றியதான ஒரு பற்றோடும் நம்பிக்கையோடும்தான் இந்த நாட்டிலே முஸ்லிம் சமூகம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. அப்படி இருந்த போதும் கூட இந்த முஸ்லிம் சமூகத்தை இப்பொழுது இந்த நாட்டில் மாத்திரமல்ல உலகத்திலே இஸ்லாமோபோபியா என்கின்ற ஒரு வகையான வியாதிக்குள் உட்படுத்தி இந்த நாட்டு முஸ்லிம்கள் மீது ஒரு சந்தேகக் கண்கொண்டு பார்த்து முஸ்லிம் சமூகத்தினுடைய பாதுகாப்பை கேள்விக்குறியாக மாறியிருக்கின்ற ஒரு அரசியல் சூழ்நிலையைப் பார்க்கின்றோம். இவற்றை விரிவாக ஆழ்ந்து பார்த்தால் ஒரு அரசியல் தேவைக்காக உருவாக்கப்பட்ட ஒரு நாடகம் என்பதை என்னால் தைரியமாக சொல்ல முடியும். எனவே இப்படியான சூழ்நிலைகளை உருவாக்காது, இந்த விடயங்களின்பால் கரிசணை கொள்ளுமாறு கேட்கின்றேன்.

இந்த நாட்டிலே கிழக்கு மாகாணத்திலே தொல்பொருலிடங்களை பாதுகாப்பது தொடர்பான ஒரு செயலணி உருவாக்கப்பட்டு அதிலே முற்றுமுழுதாக சிங்கள சகோதரர்கள் இணைக்கப்பட்டது தொடர்பாக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் பேசினார். நானும் அதிலே நிறையப் பேசலாம் என்று வந்திருந்தேன்.

ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகின்றேன். முஸ்லிம் சமூகப் பிரதிநிதிகள் கணிசமான பங்களிப்புக்களை இந்த நாட்டுக்கு செய்திருக்கிறார்கள். இந்த நாட்டின் தொல்பொருள் வரலாற்றை நீங்கள் எடுத்துப் பார்த்தால், 1890 இல் தொடங்கப்பட்ட இந்த தொல்பொருள் வரலாறு 43 வருடங்கள் இந்த தொல்பொருளிடங்களைப் பாதுகாப்பதற்கான இரசாயன பகுப்பாய்வு தொடர்பான ஒரு வல்லுனரை தேவையான ஒரு சூழ்நிலையில் இந்தியாவில் இருந்து முதலாவதாக வரவழைக்கப்பட்ட வல்லுனர் கூட ஒரு முஸ்லிம் வல்லுனர் என்பதை நான் இங்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன். திரு. கான் பகதூர் முஹமது சனாஉல்லாஹ் என்பவரால்தான் சீகிரியா பாதுகாக்கப்பட்டது. ஏனைய இடங்களும் பாதுகாக்கப்பட்டன.

எனவே இத்தகைய ஒரு சூழ் நிலையில் இந்த நாட்டிலே கலாச்சார அமைச்சராக இருந்த சீ. ஏ. எஸ் மரைக்கார், வாசு முதலியார் காரியப்பர் போன்ற முஸ்லிம் அமைச்சர்கள் கூட இந்த நாட்டினுடைய பெளத்த கலாசாரத்தையும் அதேபோன்று எங்களுடைய தொல்பொருளிடங்களையும் பாதுகாப்பதிலே மும்முரமாக இருந்திருக்கிறார்கள்.

எப்படிப் பார்த்தபோதும் எல்லாத் துறைகளிலும் முஸ்லிம்கள் இந்த நாட்டை முன்னேற்றுவதற்கு கணிசமான பங்களிப்புச் செய்திருக்கிறார்கள். இந்த நாட்டில் மூன்று இனங்களும் சமமாக மதிக்கப்பட்டு ஒன்றாக இந்த நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு இந்தப் பாராளுமன்றத்தில் இருக்கின்ற அத்தனை உறுப்பினர்களும் ஒன்றுபட வேண்டும் என்று தாழ்மையாகக் கேட்டு வாய்ப்புக்கு நன்றி கூறி விடைபெறுகின்றேன்.

நன்றி.

See less

Related Post