தேசிய அரசாங்கம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்பது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் யோசனையே என்று, போக்குவரத்து மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். அஹங்கமயில் இடம்பெற்ற கூட்டமொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ‘தேசிய அரசாங்கம் என்றொரு கருப்பொருளை ஒரு சிறந்த மனிதரே அறிமுகப்படுத்தினார். அவர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆவார். அவர், ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவுக்கு முன்னரே இந்தக் கருப்பொருளை அறிமுகப்படுத்தி விட்டார்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ‘ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும், ஐக்கிய தேசியக் கட்சியும் ஒன்றாகச் சேர வேண்டும் என்று ஐ.தே.க.வின் 17 உறுப்பினர்கள் உள்ளடங்களாக தேசிய அரசாங்கத்தை உருவாக்குவோம் என்று, அவர் பரிந்துரை செய்தார். ஆனால், எமது கட்சி உறுப்பினர்கள் பலருக்கு அது ஞாபகத்தில் இல்லை’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.