மன்னார் முசலியில் எதிர்வரும் நவம்பர் மாதம் 20ஆம் திகதி இடம்பெறவுள்ள தேசிய மீலாத் நபி விழா தொடர்பான ஆலோசனைக் கூட்டமும், மீலாத் விழாவையொட்டி மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்களை பகிர்ந்தளித்தல் மற்றும் மீலாத் விழாவுக்கான நிகழ்ச்சி ஏற்பாடுகள் குறித்த கலந்துரையாடல் இன்று காலை (27) மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
மன்னார் அரசாங்க அதிபர் மோகன்ராஜ் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உட்பட அமைச்சின் உயர் அதிகாரிகள், மன்னார் மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களின் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.
அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வேண்டுகோளின் பேரில், மன்னார் முசலியில் இடம்பெறவுள்ள தேசிய மீலாத் நபி விழாவில் பிரதம அதிதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-ஊடகப்பிரிவு-