Breaking
Sun. Jan 5th, 2025

மன்னார், முசலியில் எதிர்வரும் நவம்பர் 20 ஆம் திகதி இடம்பெறவுள்ள தேசிய மீலாத் நபி விழாவை முன்னிட்டு, முசலிப் பிரதேசத்தில் பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. அந்தவகையில், மன்னார் அரசாங்க அதிபர் மோகன் ராஜ் தலைமையில், மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஆகியோர் கலந்துகொண்டு, அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடியதுடன், விழா ஏற்பாடுகள் குறித்தும் அதிகாரிகளுடன் உரையாடினர்.

தேசிய மீலாத் விழாவுக்காக ஒதுக்கப்பட்டுள்ள 1௦௦௦ மில்லியன் ரூபா நிதியில், முசலிப் பிரதேசத்தில் உள்ள கிராமங்களை அபிவிருத்தி செய்வது மாத்திரமின்றி, விழா இடம்பெறவுள்ள முசலி தேசிய பாடசாலையின் வளப்பற்றாக்குறை மற்றும் உட்கட்டமைப்பு பிரச்சினைகள், மைதானத்தை புனரமைத்தல் ஆகியவை உள்ளிட்ட இன்னோரன்ன பிரச்சினைகளையும் தீர்த்து, அந்தப் பாடசாலையின் குறைபாடுகளை முழுமையாகப் பூர்த்தி செய்வதெனவும் முடிவு செய்யப்பட்டது.

முசலி பிரதேசத்தில் பலநோக்குக் கட்டிடம் ஒன்றை நிர்மாணித்தல், சமுர்த்தி வங்கி ஒன்றை ஸ்தாபித்தல், மக்கள் வங்கியில் தன்னியக்க வங்கி முறையை (ATM)  ஏற்படுத்திக் கொடுத்தல், சிறிய கைத்தொழில் பேட்டை ஒன்றை அமைத்தல், முசலி பிரதேச சபைக்குட்பட்ட அனைத்து கிராமங்களினதும் வீதிகளை செப்பனிடுதல், சிலாவத்துறையில் தற்பொழுது தனியார் கட்டிடத்தில் இயங்கிவரும் உபதபாலகத்தை பிறிதொரு இடத்தில் புதிதாக நிர்மாணித்துக் கொடுத்தல் ஆகியவை தொடர்பான அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டு, உரிய அதிகாரிகளுக்கும், முசலி பிரதேச சபைக்கும் திட்டங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வேண்டுகோளின் பேரில், முசலியில் இம்முறை நடைபெறவுள்ள தேசிய மீலாத் விழாவில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரதம விருந்தினராகப் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, அமைச்சர்கள் உள்ளிட்ட உயரதிகாரிகள் குழுவினர் தேசிய மீலாத் விழா நிகழ்வு இடம்பெறவுள்ள முசலி தேசிய பாடசாலைக்கு விஜயம் செய்து இடத்தைப் பார்வையிட்டதுடன், விழா ஏற்பாடுகள் தொடர்பிலும் கலந்துரையாடினர்.

அத்துடன், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வேண்டுகோளின் பேரில், தற்காலிகக் கட்டிடமொன்றில் இயங்கிவரும் சிலாவத்துறை தபால் நிலையத்தைப் பார்வையிட்ட அமைச்சர் ஹலீம், விரைவில் நிரந்தரக் கட்டிடமொன்றைக் கட்டித்தருவதாகவும் உறுதியளித்தார்.

-ஊடகப்பிரிவு-

Related Post