Breaking
Thu. Jan 9th, 2025

-சுஐப் எம்.காசிம்-

எதற்கெடுத்தாலும் வீறாப்பு பேசி அறிக்கை விடுவோருக்கு அகிலமே உருண்டையாம். நடப்பதை நாலு எட்டு வைத்து எட்டிப்பார்க்க இஸ்டமில்லாத இந்த பிரகிருதிகள், வீட்டுக்குள் ஏசியில் இருந்தவாறே சூடாக தேநீர் குடித்தவாறு அறிக்கைகள் விட்டு குட்டையை குழப்பி விடுகின்றனர். நாட்டின் இன்றைய அரசியல் களத்தை ஒரு போதும், கடந்த காலத்துடன் ஒப்பிட முடியாது என்பதை இந்த பிரகிருதிகள் இன்னும் உணரவில்லை. இதுவே இவர்களின் அப்பாவித்தனம்.

நாட்டில் 1956, 1983 மற்றும் அதற்குப் பின்னரான அசாதாரண நிலைமைகள் வேறு, இன்றைய கலவரங்களின் பின்னணிகள் வேறு என்பதற்கு களத்தில் நின்றவர்கள் பல அத்தாட்சிகளை கண்டுள்ளனர். திடீரெனத் தோன்றும் கலவரங்கள், திட்டமிட்டுத் தோன்றும் கலவரங்களாகவே இவற்றை நோக்கமுடிகின்றன.

அன்றைய கால கட்டத்தில் பல எம்பிக்கள், அமைச்சர்கள் இராஜினாமா செய்தார்களென்றால், இன்றைய சூழலிலும் இதைச்செய்ய வேண்டுமென்பது “ஊமையன் கூட்டத்தில் உளறுவாயன் மகாவித்துவான்” என்பதைப் போலுள்ளது. அரசியலை தீர்மானிக்கின்ற சக்திகளாகவும், பேரம் பேசுகின்ற கட்சிகளாகவும் சிறுபான்மையினரின் அரசியல் கட்சிகள் உள்ள போது ஏன் பதவி விலக வேண்டும்? அம்பாறை, கண்டி, கிந்தோட்டை, திகன கலவரங்கள் மட்டுமல்ல, இதற்குப் பின்னர் எது நடந்தாலும் இந்த பிரகிருதிகள் இதே மந்திரத்தையே ஜெபிக்கவுள்ளனர்.

இன்றுள்ள ஊடகங்கள், முஸ்லிம் அமைப்புக்கள், பாராளுமன்ற அதிகாரம், உலகமே உள்ளங்கைக்குள் அடங்கி விட்ட உலக மயமாக்கல்களுக்கு மத்தியில் பதவி விலகுவதுதான் உரிய தீர்வா? என எம்மில் பலர் சிந்திக்கின்றனர். அதிகாரங்களை இலக்கு வைத்து எறியப்படும் இந்த பிரகிருதிகளின் ஏவுகணைகள், முஸ்லிம் சமூகத்தை ஏதிலிகளாக்கி விடும். ஏற்கனவே முஸ்லிம் கட்சிகள் சிதறியுள்ள நிலையிலும், சமூகத்துக்கெதிரான கலவரங்கள், நெருக்கடிகளின் போது ஒரே கூடையின் கீழ் செயற்படாவிட்டாலும், ஒரே குரலாக ஒலிப்பதே பெரும் நிம்மதி.

இந்த நிம்மதியில்தான் எமது சமூகத்தின் அடுத்த இயங்கு தளம் உருவாகப் போகின்றது. பசியில்லை, தாகமில்லை என்றிருந்தால் சமூகத்தின் ஒற்றுமை உணரப்படவில்லை. சஹருக்கு (நோன்பு பிடிக்கும் நேரம்) பசிப்பதில்லை, மாறாக இப்தார் (நோன்பு துறக்கும் நேரம்) நேரத்திலே பசியும், தாகமும் ஏற்படுகிறது. “முஸ்லிம் கட்சிகளின் தோற்றம் இனி சாத்தியமில்லை” எனுமளவுக்கு கட்சிகள் தோன்றிவிட்டன.

இனிமேல் தோன்றிய கட்சிகள் ஒன்றிப்பதற்கான இப்தாருடைய நேரமே வரவுள்ளது என்பதை வீட்டுக்குள்லிருந்து குறட்டை விடும் ஆசாமிகளும், அறிக்கை விடுபவர்களும் உணரவேண்டும். இதைப் புரிவதில்தான் எமது சமூக விடுதலையின் தடைச்சுவர்கள் தகர்த்து எறியப்படவுள்ளது. இத்தனைக்கும் சமூக விடுதலைக்காக அரசியல் செய்வதாகக் கூறி, தமக்கு ஏற்ற பதவி கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்தோரே, முஸ்லிம் அமைச்சர்கள் பதவி விலக வேண்டுமென்ற பந்தயத்தை கையிலெடுத்துள்ளனர். பதவிகளை பொருட்படுத்தாது சமூக விடுதலைக்காக உளத்தூய்மையுடன் குரல் கொடுத்திருந்தால், இவர்களின் கோரிக்கைகள் நியாயமாகியிருக்கும்.

ரகளைகளின் பின்புலத்தில் பேரினவாதத்தின் மத உணர்வுகள் ஆழமாக வேரூன்றியுள்ளன. கடந்தகால இனக்கலவரங்கள் தற்போது வெறும் மதக் கலவரங்களாக மட்டும் மாறுவதற்கான அரசியல் களமே, நாட்டின் இன்றைய அரசியல் சூழலில் இழையோடியுள்ளது.

எனவே, அரசியலாக இக்கலவரங்களை நோக்காது, மத அடிப்படையிலான புரிந்துணர்வின்மையின் இடைவெளியால் வந்த வினைகளாகவே இதை அணுக வேண்டியுள்ளது. உள்ளங்கையில் காயம் என்றால் வலக்காலுக்கு மருந்து கட்டுவது அறிவுடமையாகாது. கையும், காலும் உடலிலே உள்ளதற்காக எந்த உறுப்பிலும் மருந்து கட்ட முடியாது.

மதத்தின் அடிப்படையில் தோன்றும் அசாதாரண சூழ்நிலையை அரசியலுடன் முடிச்சிப்போட முடியாதென்பதை, இந்த அறிக்கைகள் மாத்திரம் விடும் அரசியல்வாதிகள் எப்போது உணர்வார்களோ தெரியாது. அப்படித்தான் முடிச்சுப் போடுவதனால், எரிந்துபோன எமது சமூகத்தின் சொத்துக்களையல்ல, நாட்டின் மீதான நம்பிக்கையை கட்டியெழுப்ப நாலடி நகர்ந்து நேரடிக்களம் காண, இந்த அறிக்கைவிடும் மகான்கள் முன்வரவேண்டும்.

Related Post