Breaking
Tue. Dec 24th, 2024

உள்ளூரட்சித் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி நாடளாவிய சபைகளில் தனித்துப் போட்டியிடுவதா? அல்லது இணைந்து போட்டியிடுவதா? என்பது தொடர்பான கலந்துரையாடல் கட்சித் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையில் இன்று மாலை   (08/ 12/ 2017) இடம்பெற்றது.

நாட்டின் பல பாகங்களிலுமுள்ள கட்சியின் முக்கியஸ்தர்கள், அமைப்பாளர்கள், தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் மற்றும் கட்சியின் கிளை உறுப்பினர்கள் எனப் பலர் கலந்து கொண்டு தமது கருத்துக்களை முன்வைத்தனர்.

தனித்துப் போட்டியிடுவதால் ஏற்படும் சாதக பாதகங்கள் மற்றும் இணைந்துப் போட்டியிடுவதால் ஏற்படும் சாதக பாதகங்கள் தொடர்பில் அந்தந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் பலர் கருத்து வெளியிட்டனர்.

அம்பாரை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய இடங்களில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து போட்டியிடுவது மற்றும் ஆசனப் பகிர்வு தொடர்பில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் தொடர்ச்சியான பேச்சுக்கள் இடம்பெற்று வருவதாகவும், கட்சியின் ஆசனப் பகிர்வில் திருப்தி ஏற்படாத பட்சத்தில் அந்த இடங்களில் தனித்துப் போட்டியிடுவது பற்றி முடிவெடுக்கப்படுமென அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அறிவித்தார்.

கண்டியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுமென இந்தக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

அம்பாறை மாவட்டத்தில் தூய முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகர்களான ஹஸனலி, பசீர் சேகுதாவூத், அன்சில், தாஹிர் மற்றும் நசார் ஹாஜியார் ஆகியோரின் ஜனநாயக ஐக்கிய முன்னணியுடன் இணைந்து போட்டியிடுவது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும், எதிர்வரும் நாட்களில் உறுதியான முடிவை கட்சித்தலைமை அறிவிக்குமென தவிசாளர் அமீர் அலி கூட்டத்தில் தெரிவித்தார்.

இந்தக் கலந்துரையாடலில் கண்டி, கொழும்பு, திருகோணமலை, சம்மாந்துறை, மட்டக்களப்பைச் சேர்ந்த உள்ளூராட்சி சபைகளின் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் முன்னிலையில் கட்சியில் இணைந்து கொண்டமை சிறப்பம்சமாகும்.

இந்தக் கூட்டத்தில் செயலாளர்நாயகம் சுபைர்தீன், தவிசாளர், அமீர் அலி, எம். பிக்களான நவவி, இஷாக், மஹ்ரூப் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களான பாயிஸ், அலிகான் ஷரீப் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

 

 

 

Related Post