Breaking
Thu. Jan 16th, 2025

கே.பாரதிராஜா

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான எதிர்பார்ப்புகளால் கொழும்பு அரசியல் களம் பரபரப்படைந்துவரும் நிலையில், தேசிய தேர்தல் ஒன்றுக்குத் தயாராகுமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்க ளுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச­ பணிப்புரை விடுத்துள்ளார் என அரச உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தல் ஆகிய இரண்டுக்கும் அரசு எப்போதும் தயார் நிலையில் இருக்கவேண்டும் என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­ச தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அண்மைக்காலமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சிரேஷ்ட உறுப்பினர்களிடையே இடம்பெற்றுவரும் கருத்து மோதல் குறித்து விசேட கவனம் செலுத்தியுள்ள ஜனாதிபதி ராஜபக்­, அமைச்சர்கள் தங்களுக்கிடையே கருத்து முரண்பாடுகளைத் தவிர்த்து கட்சியின் வெற்றிக்காக ஒற்றுமையாக செயற்படவேண்டும் என்றும் அறிவுரை வழங்கியுள்ளார் என்றும் தெரியவருகின்றது.

ஐ.நா. பொதுச் சபையின் 69ஆவது அமர்வில் பங்கேற்க நியூயோர்க் சென்ற ஜனாதிபதி, நேற்றுமுன்தினம் நாடு திரும்பியதையடுத்து நேற்றுமுன்தினம் இரவு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம் அலரி மாளிகையில் இடம்பெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

நடைபெற்று முடிந்த ஊவா தேர்தலில் அரசு 51 வீத வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தது. ஆனால், 2009ஆம் ஆண்டு ஊவா தேர்தலில் 72 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தது. கடந்த முறையைவிட இம்முறை தேர்தலில் அரசின் வாக்கு வங்கி 21 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. இது குறித்தும் மத்திய குழுக் கூட்டத்தில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

எது எப்படியிருப்பினும், ஊவா தேர்தலில் அரசின் வெற்றிக்குப் பங்களிப்புச்செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ள ஜனாதிபதி மஹிந்த, ஊவா தேர்தலினூடாக அரசுக்கு விடுக்கப்பட்டுள்ள சிகப்பு சமிக்ஞை குறித்து அனைவரும் அவதானத்துடன் இருக்கவேண்டும் என்று தெரிவித்துள்ளதாகவும் அறியமுடிகின்றது.

Related Post