தேர்தலுக்கு முன்னர் பொதுமக்களை முட்டாளாக்கும் வரவு செலவுத்திட்டமே இன்று 24-10-2014 அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக்கட்சி தெரிவித்துள்ளது.
இது ஒரு தொகை டொபியை வானத்தில் வீசியமைக்கு ஒப்பானது என்று கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கம் எல்லோருக்கும் எதனையாவது கொடுக்க இந்த வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் முயற்சித்துள்ளது.
எனினும் இந்த வரவுசெலவுத்திட்டத்துக்குள் சென்று பார்த்தால் அங்கு தெளிவான ஒதுக்கீடுகள் இல்லை என்று ஹர்சா குறிப்பிட்டுள்ளார்.
அரச சேவையாளர்களுக்கு 10 ஆயிரம் ரூபா வரை சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறுகிறது.
எனினும் ஆகக்குறைந்த சம்பளம், கொடுப்பனவுகள், அடிப்படை சம்பளத்துடன் சேர்க்கப்படுதல் ஆகியவற்றை கவனிக்கும் போது இந்த வருடத்தில் 2500 ரூபா மாத்திரமே அரச சேவைகளுக்கான சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை வரவு செலவுத்திட்டத்தின்படி அரச சேவையாளர்களின் சம்பளத்துக்காக 16 பில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதனை தற்போது பணியில் உள்ள 1.5 மில்லியன் அரச சேவைகளை கொண்டு பிரித்துப்பார்த்தால் ஒருவருக்கு 2700 ரூபாவே சம்பள உயர்வாக கிடைத்துள்ளது என்று ஹர்சா குறிப்பிட்டுள்ளார்.