Breaking
Mon. Dec 23rd, 2024

பொதுத் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இன்று (15) நள்ளிரவுடன் நிறைவடைகிறது.

எதிர்ரும் 17ம் திகதி பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நாட்டின் தேர்தல் சட்டத்திற்கு அமைய தேர்தலுக்கு 48 மணித்தியாலங்களுக்கு முன்னதாக அனைத்து பிரச்சார நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.

இதன்படி, இந்தக் காலம் அமைதியான காலம் என அழைக்கப்படுகின்றது. இந்தக் காலத்தில் வாக்காளர்கள் சுயாதீனமாக முடிவு எடுக்கக் கூடிய வகையில் வேட்பாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய கட்சிகளுக்கு அறிவித்துள்ளார்.

இதேவேளை, வேட்பாளர்களுக்கோ கட்சிகளுக்கோ ஆதரவாக போதி பூஜைகள், தர்ம உரைகள் உள்ளிட்ட மத நிகழ்வுகளை இந்த இரண்டு நாட்களிலும் மேற்கொள்ள தேர்தல் ஆணையாளர் தடை விதித்துள்ளார்.

கையடக்கத் பேசிகளின் ஊடாக குறுஞ்செய்திகளை அனுப்பி பிரச்சாரம் செய்தல் இணைய வழியிலான பிரச்சாரம் ஆகியனவும் தடை செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, வேட்பாளர்கள் அல்லது கட்சி தொடர்பில் செய்தி அல்லது விளம்பரங்களை அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடங்களில் பிரசுரிப்பதும், ஒளி, ஒலிபரப்புச் செய்வதும் முற்று முழுதாக தடை செய்யப்பட்டுள்ளது என மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.

இதேவேளை, பிரதான கட்சிகளின் இறுதி தேர்தல் பிரச்சார கூட்டங்கள் இன்று இடம்பெறவுள்ளன.

அதன்படி நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் பிரச்சார கூட்டம் மருதனையில் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெறவுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் இறுதிக் கூட்டம் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் குருநாகலில் இடம்பெறவுள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியின் கூட்டம் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் புதுக்கடை சந்திக்கு அருகில் இடம்பெறவுள்ளது.

Related Post